2016-01-09 15:32:00

இந்தோனேசியாவில் பயங்கரவாதத்தை ஒழிக்க பல்சமயப் பேரணி


சன.09,2016. இந்தோனேசியாவில் தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் ஒழித்து, பன்முகம் கொண்ட ஓர் உண்மையான இந்தோனேசிய சமுதாயத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இம்மாதம் 17ம் தேதியன்று பெரிய பல்சமயப் பேரணி ஒன்றை ஜகார்த்தாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் பெரிய இஸ்லாமியக் குழுவான Nahdlatul Ulama (NU) நடத்தும் இப்பேரணியில், மற்ற 13 இஸ்லாமிய நிறுவனங்களும், இந்தோனேசிய கத்தோலிக்க ஆயர் பேரவையும், பல்வேறு பிரிந்த கிறிஸ்தவ சபைகளும், அந்நாட்டின் கன்பூஷிய மதத்தினரும் கலந்துகொள்ள உள்ளனர்.

ஜகார்த்தாவின் வரலாற்று புகழ்பெற்ற Lapangan Banteng வளாகத்தில் நடைபெறும் இப்பேரணியில் குறைந்தது பத்தாயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பேரணி குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திடம் பேசிய, இந்தோனேசிய ஆயர் பேரவையின் பொதுநிலையினர் ஆணைக்குழு செயலர் அருள்பணி Guido Suprapto அவர்கள், பனமுகத்தன்மையே நாட்டின் பலம் என்றும், இதில் கலந்துகொண்டு அமைதியான நல்லிணக்க வாழ்வு இயலக் கூடியதே என்பதையும் வெளிப்படுத்த விரும்புவதாகத் தெரிவித்தார்.      

மேலும், ஐ.எஸ். அமைப்பில் சேருவதற்கு இந்தோனேசியாவிலிருந்து 800 பேர் சென்றுள்ளனர், இவர்களில் 284 பேரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மற்றும் குறைந்தது 52 பேர் இறந்துள்ளனர் என்று, இந்தோனேசிய அரசின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.