2016-01-09 14:01:00

இது இரக்கத்தின் காலம் - அகக்கண்கள் போதும் அரவணைத்து வளர்க்க!


‘டீன்ஏஜ்’ இளைஞன் அலெக்ஸ், தன் தந்தையுடன் வாழ்ந்து வந்தான். இருவரிடையிலும் ஆழமான, அழகான உறவு இருந்தது. அலெக்ஸ், கால்பந்தாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்டவன். ஆனால், அவன் உடல், அந்த விளையாட்டிற்கு ஏற்றதுபோல் வலுமிக்கதாய் இல்லை. இருந்தாலும் அவனுக்கிருந்த ஆர்வத்தைக் கண்டு, பயிற்சியாளர், கல்லூரி கால்பந்தாட்டக் குழுவில் ஓர் இடம் கொடுத்தார். பல போட்டிகளில் விளையாடும் வாய்ப்புக்கள் அலெக்ஸுக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும், அவன் ஓரத்திலிருந்து, தன் குழுவினரை உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பான். தன் மகன் அலெக்ஸ் களமிறங்கி விளையாடவில்லையெனினும், அவனது குழு விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் அவன் தந்தை வருவார். உற்சாகமாய் கைதட்டி இரசிப்பார்.

ஈராண்டுகள் இப்படியே உருண்டோடின. முக்கியமான ஒரு போட்டி நெருங்கி வந்ததால், குழுவினர் அனைவரும் வெறியுடன் பயிற்சி பெற்று வந்தனர், அலெக்ஸையும் சேர்த்து. போட்டிக்கு முந்தின நாள், அலெக்ஸின் தந்தை இறந்துவிட்ட செய்தி வந்தது. பயிற்சியாளர், அலெக்ஸை அணைத்து, ஆறுதல் சொல்லி, வீட்டுக்கு அனுப்பிவைத்தார். போட்டியைப்பற்றிக் கவலைப்பட வேண்டாமென்று சொல்லி அனுப்பிவைத்தார்.

அடுத்த நாள், முக்கியமான அந்த போட்டியில், அலெக்ஸின் குழு சரிவர விளையாடவில்லை. எனவே, தோற்கும் நிலையில் இருந்தனர். விளையாட்டின் பாதி நேர இடைவேளையின்போது அலெக்ஸ் திரும்பிவருவதை, குழுவினர் பார்த்தனர். அதுவும், குழுவின் சீருடை அணிந்து, விளையாட வந்திருந்தான் அவன். கால்பந்தாட்டத்தின் மீது அவனுக்கு இருந்த ஆர்வம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனாலும், அதற்காக இப்படியா? தந்தையின் அடக்கம் முடிந்தும் முடியாமல், அவன் விளையாட்டுத்திடலுக்கு வந்தது, அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்தது.

திடலுக்கு வந்த அலெக்ஸ், பயிற்சியாளரிடம் சென்று, "சார் இந்த இரண்டாவது பாதியில் தயவுசெய்து என்னை விளையாட அனுமதியுங்கள்" என்று கண்ணீரோடு கெஞ்சினான். ஏற்கனவே தன் குழு தோற்றுக்கொண்டிருந்தச் சூழலில், இவனை விளையாட அனுமதித்தால், நிலைமை இன்னும் மோசமாகுமே என்று பயிற்சியாளர் தயங்கினார். எனினும், அந்த இளைஞனின் மனதை உடைக்க விரும்பவில்லை. இனியும் இழப்பதற்கு என்ன இருக்கிறது, இந்த இளைஞனாவது திருப்தி அடையட்டுமே என்ற எண்ணத்தில், அனுமதி தந்தார்.

இரண்டாவது பாதியில், அலெக்ஸின் அற்புதமான விளையாட்டால், தோற்கும் நிலையில் இருந்த அவனது குழு வெற்றி அடைந்தது. அவனது குழுவினருக்கு ஆனந்த அதிர்ச்சி; எதிரணிக்கும் அதிர்ச்சி. ஆட்டத்தின் முடிவில் அலெக்ஸைத் தோள்களில் சுமந்து ஆரவாரம் செய்தனர். ஆரவாரம் எல்லாம் ஓய்ந்தபின், பயிற்சியாளர் அவனிடம், "தம்பி, என்னால் இதை நம்பவே முடியவில்லை. உனக்கு என்ன ஆயிற்று? எங்கிருந்து வந்தது உன் பலம், திறமை எல்லாம்?" என்று நேரடியாகவே கேட்டார்.

அலெக்ஸ் கண்ணீரோடு பேசினான்: "சார், என் அப்பா இறந்துவிட்டார் என்பது மட்டுமே உங்கள் அனைவருக்கும் தெரியும். அவருக்குப் பார்வைத் திறன் கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டான். குழுவினரும், பயிற்சியாளரும் அதிர்ச்சியில் அவனைப் பார்த்தனர். அலெக்ஸ் தொடர்ந்தான்: "ஆம், என் அப்பாவுக்குப் பார்வைத் திறன் கிடையாது. ஆனால், எனது குழுவின் ஒவ்வொரு ஆட்டத்திற்கும் தவறாமல் வந்து என்னை உற்சாகப்படுத்தினார். இன்று, இந்த ஆட்டத்தைத்தான், முதன் முதலாக அவர் வானிலிருந்து கண்ணாரக் கண்டிருப்பார். நான் விளையாடுவதை அவர் முதல் முதலாகப் பார்க்கிறார் என்ற எண்ணமே, என் முழுத் திறமையை வெளிக்கொணர்ந்தது என்று நினைக்கிறேன். இதுவரை எனக்காக மட்டுமே விளையாடிவந்த நான், இன்று, அவருக்காக விளையாடினேன்" என்று, அலெக்ஸ் பேசப் பேச, அங்கிருந்தவர் அனைவரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது... அதில், ஆனந்தக் கண்ணீரும் கலந்திருந்தது.

அகக்கண்கள் போதும், அரவணைத்து வளர்ப்பதற்கு!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.