2016-01-07 16:04:00

மும்பையில், உலகின் முதல் குடிசை அருங்காட்சியகம்


சன.07,2015. மும்பையில் தாராவி குடிசை பகுதியில், உலகிலேயே முதல் முறையாக நடமாடும் குடிசை அருங்காட்சியகம் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது.

ஆசியாவிலேயே மிகப் பெரிய குடிசைப் பகுதி மும்பை தாராவி. ‘ஸ்லம்டாக் மில்லியனேர்’ என்ற திரைப்படம் வழியே, சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ள தாராவி பகுதியின் குறுகிய சந்துகளில் 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் வாழ்கின்றனர்.

தாராவி பகுதியில் உலகிலேயே முதல் முறையாக குடிசை அருங்காட்சியகம் திறக்கப்பட உள்ளது. இஸ்பானியக் கலைஞர் ஹோர்கே ரூபியோ அவர்களின் (Jorge Rubio) முயற்சியில் இந்த நடமாடும் அருங்காட்சியகம் திறக்கப்படுகிறது.

‘‘குடிசை பகுதிகளிலேயே திறக்கப்படும் முதல் அருங்காட்சியகம் இதுதான். அடுத்த மாதம் திறக்கப்படும் அருங்காட்சியகம் 2 மாதங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்’’ என்று ரூபியோ தெரிவித்துள்ளார்.

தாராவி பகுதியில் குடிசைத் தொழில்கள் போல் சிறுசிறு தொழிற்சாலைகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இங்கு தயாராகாத பொருட்களே இல்லை என்று சொல்லலாம். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை பொருட்களும் இங்கு தயாரிக்கப் படுகின்றன. மண்பானைகள் தொடங்கி, மறுசுழற்சி செய்யும் பொருட்கள் வரை அனைத்தும் அருங்காட்சியகத்தில் இடம் பெறவுள்ளன.

குடிசைகளில் வாழ்ந்தாலும் அவர்களுடைய திறமைகள், கலைக் திறன்களை வெளி உலகுக்கு தெரியப்படுத்தவே இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படுவதாக இதன் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

தாராவி குடிசைகளை கடந்த 2010-ம் ஆண்டு பிரிட்டன் இளவரசர் சார்ல்ஸ் அவர்கள்  பார்வையிட்டபோது, மறுசுழற்சி மூலம் தயாரிக்கப்படும் பொருட்களைக் கண்டு வியந்து, தாராவி மக்களை அவர் பாராட்டினார்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.