2016-01-07 16:18:00

திருத்தந்தையின் சனவரி செபக் கருத்து, காணொளி வடிவில்


சன.07,2015. கடந்த 170 ஆண்டுகளுக்கும் மேலாக, மாத இதழ்களிலும், துண்டு பிரசுரங்களாகவும் அச்சு வடிவில் வெளிவந்த திருத்தந்தையின் ஒவ்வொரு மாத செபக் கருத்துக்கள், சனவரி 6, இப்புதனன்று முதன்முறையாக காணொளி வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.

1844ம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில் குருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இயேசு சபை இளவல்கள் துவங்கிய மன்றாட்டு திருத்தூதுப்பணி (Apostleship of Prayer) என்ற முயற்சி, தற்போது காணொளி வடிவிலும், இணையத்தள முயற்சியாகவும் வடிவெடுத்துள்ளது.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஒரு புதிய முயற்சியாக வெளியான இந்தக் காணொளிப் பதிவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2016ம் ஆண்டு சனவரி மாதம், ‘பல்சமய உரையாடல் அமைதியை வளர்க்க மன்றாடுவோம்’ என்பதை தன் செபக் கருத்தாக வெளியிட்டுள்ளார்.

திருத்தந்தை விடுத்துள்ள இந்தக் காணொளித் தொகுப்பில், ஒரு புத்த மத பெண் துறவி, யூத மத ரபி, இஸ்லாமிய மத குரு மற்றும் ஒரு கத்தோலிக்க அருள் பணியாளர் ஆகியோரும் தோன்றி, தாங்கள் புத்தரை, அல்லாவை, கடவுளை, இயேசுவை நம்புவதாகக் கூறியுள்ளனர்.

இந்தக் காணொளியின் பிற்பகுதியில், இந்நால்வரும் 'நான் அன்பை நம்புகிறேன்' என்ற வார்த்தைகளை ஒருவர் பின் ஒருவராகக் கூறியுள்ளனர்.

காணொளியின் இறுதியில், "பல்வேறு மத நம்பிக்கைகளைக் கொண்ட ஆண்கள், பெண்கள் நடுவே நிகழும் உண்மையான உரையாடல், அமைதி, நீதி ஆகிய கனிகளை உருவாக்கவேண்டும்" என்ற தனது சனவரி மாதக் கருத்தை மீண்டும் ஒருமுறை கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'உங்கள் செபங்களில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்' என்ற வார்த்தைகளுடன் இந்தக் காணொளிப் பதிவை நிறைவு செய்கிறார்.

ஒவ்வொரு மாதமும் வெளியாகவிருக்கும் இந்தக் காணொளித் தொகுப்பு, வத்திக்கான் தொலைக்காட்சி மையம், இயேசு சபையினர், ஆர்ஜென்டீனா நாட்டின் கலைஞர்கள், தொழிநுட்ப வல்லுனர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த முயற்சியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

www.thepopevideo.org என்ற இணையதளத்தின் வழியே, YouTubeல் காணக்கூடிய இந்தக் காணொளித் தொகுப்பில், திருத்தந்தை பேசும் இஸ்பானியச் சொற்கள், ஆங்கிலம், இத்தாலியம், ஜெர்மன், பிரெஞ்ச், மற்றும் சீன மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. 

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.