2016-01-07 16:34:00

கந்தமால் மறைசாட்சிகள் பெரும் உந்து சக்தி - பேராயர் பார்வா


சன.07,2015. இந்தியாவில் கந்தமால் பகுதியில் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களை மறைசாட்சிகள் என்று அறிவிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள், தலத்திருஅவைக்கும், இந்திய கிறிஸ்தவர்களுக்கும் மகிழ்வையும் பெருமிதத்தையும் தரும் ஒரு நிகழ்வு என்று கட்டக் புவனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள் கூறினார்.

இந்து தீவிரவாத அமைப்பினரின் வன்முறையால் கொல்லப்பட்ட கந்தமால் கிறிஸ்தவர்களை மறைசாட்சிகள் என்று அறிவிக்கும் நடைமுறைகளை தொடங்குவதற்கு, இம்மாதம் 5ம் தேதி அறிவித்த மும்பைப் பேராயரும், இந்திய கத்தோலிக்க ஆயர்களின் தலைவருமான கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்கள், இந்த நடைமுறையை முன்னின்று நடத்த பேராயர் பார்வா அவர்களை நியமித்துள்ளார்.

2008ம் ஆண்டு நடைபெற்ற இந்த வன்முறையில் ஏறத்தாழ 100 பேர் கொல்லப்பட்டனர்; மற்றும், 56,000த்திற்கும் அதிகமானோர் தங்கள் இல்லங்களையும், உடைமைகளையும் இழந்துள்ளனர்.

இந்தியாவில் சிறுபான்மையினராக வாழும் நிலையால் துன்பங்களை சந்திக்கும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும், கந்தமால் மறைசாட்சிகள் பெரும் உந்து சக்தியாக இருப்பர் என்று கூறிய பேராயர் பார்வா அவர்கள், கொலையுண்ட கிறிஸ்தவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்று எழுப்பப்படும் என்றும் அறிவித்தார். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.