2016-01-07 13:56:00

இது இரக்கத்தின் காலம் – பகைவர் நெஞ்சிலும் சுரக்கும் இரக்கம்


அது 1943ம் ஆண்டு. இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த சமயம் அது. அவ்வாண்டு கிறிஸ்மஸ்க்கு ஐந்து நாள்களுக்கு முன்னர், அமெரிக்க போர் விமானம் B-17 ஐ, ஜெர்மன் Messerschmitt போர் விமானம் மூன்று அடி வித்தியாசத்தில் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. மேற்கு வெர்ஜீனியா மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது Charles Brownதான் B-17 போர் விமானத்தை ஓட்டிய விமானி. மற்ற போர் விமானங்கள் தூள் தூளாய் சுட்டு நொறுக்கப்பட்ட நிலையில், இவரது விமானம் மட்டும் ஜெர்மன் வான்பரப்பில் தனியாகப் பறந்து கொண்டிருந்தது. விமானத்தின் வால்பகுதியில் துப்பாக்கியுடன் நின்று போரிட்டவர் கொல்லப்பட்டுவிட்டார். தொடர்ந்து கேட்ட துப்பாக்கி சப்தங்கள் விமானி Charles Brown அவர்களின் இரத்தத்தை உறைய வைத்தன. கடவுளே, எங்களை எதிரி அழிக்கப் போகிறானே என்று இவரும், உதவி விமானி Spencer “Pinky” Lukeம் நடுங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் அடுத்த நிமிடம் நடந்ததுதான் இரண்டாம் உலகப் போரில் பெரிதாகப் பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாகும். Brownம், அவரது உதவியாளரும் எதிரி விமானியை எட்டிப் பார்த்தபோது, அந்த ஜெர்மன் போர் விமானி, நட்போடு தலையை அசைத்தார். இயேசு சொன்னது போல, பகைவரிடமும் அன்பு காட்டினார்(மத்.5,44) அந்த ஜெர்மன் நாட்டு விமானி. ஆண்டுகள் கடந்து இவர்கள் மூவரும் சந்தித்தபோது ஆனந்தக் கண்ணீரில் நனைந்தனர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இரக்கத்தின் காலம் பகைவரிடமும் அன்புகூர அழைக்கும் காலம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.