2016-01-06 14:50:00

மூவேளை செப உரை: அருங்குறிகளின் பொருளுணர்ந்து கடவுளை நாடுவோம்


சன.,06,2016. திருக்காட்சித் திருவிழாவை முன்னிட்டு, மூன்று ஞானிகளின் உடையணிந்தும், பல்வேறு உடையலங்காரங்களுடனும் இத்தாலியின் பல பங்கு தளங்களிலிருந்து அணிவகுப்பாய் சென்று, தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளை நோக்கி, இவ்விழா குறித்த சிந்தனைகளை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருவிழா மூவேளை செப உரையில், அவர் வழங்கிய கருத்துக்களை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

இன்றைய நற்செய்தியில் நாம் காணும் கீழ்த்திசை ஞானிகள், திருஅவை, அனைவருக்கும் பொதுவானது என்ற உலகளாவிய நிலையை காண்பித்து நிற்கின்றனர். உலகின் அனைத்து மக்களும் கிறிஸ்துவின் கருணை நிறை அன்பை கண்டு அனுபவிக்கவேண்டும் என திருஅவை விரும்புகிறது. தூர கிழக்கு நாடுகளிலிருந்து குழந்தை இயேசுவைத் தேடி வந்த இந்த ஞானிகளில், மனித குலத்தின் உருவகத்தைக் காண்கிறது திருஅவை.

கிறிஸ்மஸ் இரவன்று இயேசுவை சந்திக்க வந்த இடையர்களுக்கும், தற்போது தூர கிழக்கு நாடுகளிலிருந்து வந்துள்ள ஞானிகளுக்கும் இடையே மிகப்பெரும் வித்தியாசங்கள் உள்ளபோதிலும், அவர்களுக்குள் ஓர் ஒற்றுமையையும் நாம் காண்கிறோம். இருவருமே, அடையாளம் ஒன்றினைக் கண்டு, இயேசுவைக் காண வந்தனர். இறைவனைக் கண்டுகொள்ள நாம் எவ்விதம் செயல்படவேண்டும், எவ்வாறு இறைவனுக்கு நம் இதயத்தையும் மனதையும் திறக்க வேண்டும், அவர் செய்தியை தராள மனதுடன் ஏற்பது எவ்வாறு, என்பவைகளை இவர்கள் இருவரும் நமக்குக் கற்றுத் தருகின்றனர். விண்மீனைக் கண்டதும் ஞானிகள் அக மகிழ்ந்தனர். நமக்கும் விண்மீன் உள்ளது, அதுவே நற்செய்தி. அந்த நற்செய்தி எனும் ஒளியே நம்மை இயேசுவை நோக்கி அழைத்துச் செல்கிறது. நற்செய்தியின்றி நாம் அவரைச் சந்திக்க இயலாது. ஞானிகளைப்போல் நாமும், வாழ்வின் பொருளை கண்டுகொள்ள முயல்வோம். ஏழைகளை ஒதுக்காமல், தாழ்ச்சியை ஏற்றுக்கொள்ள இயேசு நமக்குக் கற்றுத் தருகிறார். நம் பயணத்தின் மகிழ்வை, பிறருடன் பகிர்ந்து கொண்டாடுவோம்.

இவ்வாறு தன் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 7ம் தேதி, வியாழனன்று, கிறிஸ்து பிறப்பு பெருவிழாவைச் சிறப்பிக்கும் கிறிஸ்தவர்களுக்கும், ஆர்த்தடாக்ஸ் கத்தோலிக்க சமூகங்களுக்கும் தன் வாழ்த்துக்களை வெளியிட்டதோடு, இத்திருக்காட்சி விழாவோடு சிறப்பிக்கப்படும் குழந்தைகள் விழா குறித்தும் எடுத்துரைத்து, வாழ்த்துக்களையும் தெரிவித்தார். பின்னர், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.