2016-01-06 14:57:00

இது இரக்கத்தின் காலம்.. கருணைக் கண் திறக்க, கடவுள் தெரிவார்


தெரு ஓரத்தில் அமர்ந்து ஒவ்வொருவர் முகத்தையும் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்த அந்த பிச்சைக்காரரின் முகம் எனக்கு பழக்கப்பட்ட ஒன்றாக, எங்கேயோ பார்த்த ஒன்றாக இருந்தது. மூளையைக் கசக்கிப் பார்த்தேன். எங்கே என்பதுதான் பிடிபடவில்லை. ஏதாவது இரயில் நிலையத்திலோ, அல்லது வேறு ஓர் இடத்தில் அவர் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும்போதோ அவரைப் பார்த்து அவரின் உருவம் என் மனதில் பதிந்திருக்கலாம் என என்னையே தேற்றிக் கொண்டேன். ஆனால் அந்த உருவம் எனக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றாக இருந்தது. அவருக்கு பிச்சையிட வேண்டுமா என சிந்திப்பதற்குள், நான் ஏற வேண்டிய பேருந்து வந்துவிட, என் பயணம் வேறு பாதையில் வேறு சிந்தனையுடன் தொடர்ந்தது. மாலையில் பணி முடிந்து திரும்பியபோது, அந்தப் பிச்சைக்காரர் அங்கு இல்லை. அடுத்த நாள் காலையில் கோவிலுக்குச் செல்லும்போது, அந்த இடத்தைப் பார்த்தேன், அது அப்போதும் காலியாக இருந்தது. கோவிலுக்குள் நுழைந்து, செபிக்கத் துவங்குமுன், தெய்வச் சிலை வைத்திருந்த பீடத்தை நோக்கினேன். அதிர்ந்து போனேன். அந்தப் பிச்சைக்காரரின் உருவம் அங்கு வைக்கப்பட்டிருந்தது. இப்போது புரிந்தது. அது நான் தினமும் பார்க்கும் உருவம்தான். எனக்கு அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. இத்தனை ஆண்டுகள் கோவிலுக்கு வந்து, யாசகம் கேட்டு நான், யார் முன் கையேந்தி நின்றேனோ, அவரை தெருமுனையில் என்னால் எப்படி அடையாளம் காண முடியாமல் போயிற்று? ஓடினேன், தெருமுனை நோக்கி. அங்கு அவர் இல்லை. இனி அப்படியொரு வாய்ப்பு எனக்கு கிடைக்கப் போவதில்லை என்பது புரிந்தது. என் கருணைக் கண் அப்போது திறந்திருந்தால், அவரை ஒருவேளை அடையாளம் கண்டு கொண்டிருப்பேன். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.