சன.05,2016. இன்று நாம் பார்க்க வேண்டுமென்று இறைவன் விரும்பும் விண்மீனைக் கண்டுகொள்வதற்கு, அவரிடம் அருள் வேண்டுவோம், ஏனென்றால் அந்த விண்மீன் இயேசுவிடம் நம்மை அழைத்துச் செல்லும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தூய பிரான்சிஸ் அசிசியார் 1223ம் ஆண்டு டிசம்பரில், உள்ளூர் விலங்குகளை வைத்து, முதல் கிறிஸ்மஸ் குடிலை அமைத்த இத்தாலியின் கிரேச்சோ எனும் ஊருக்கு இத்திங்கள் மாலை சென்று செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அச்சமயத்தில் அங்கு இருந்த மக்களிடம் இவ்வாறு கூறினார்.
இயேசுவின் பிறப்பு பற்றிப் பேசும்போது இரு காரியங்களை நான் நினைத்துப் பார்க்கிறேன், ஒன்று, கீழ்த்திசை மூன்று ஞானிகளை வழிநடத்திய விண்மீன், மற்றொன்று, வானதூதர் இடையர்களிடம் கூறியது என்றுரைத்தார் திருத்தந்தை.
வானம், விண்மீன்களால் நிறைந்துள்ளது, ஆயினும் அந்த மூன்று ஞானிகள் ஒரு சிறப்பு விண்மீனைக் கண்டனர், அதுவே அவர்களை அனைத்தையும் விட்டுவிட்டு, தெரியாத இடத்திற்குப் பயணம் மேற்கொள்ள வைத்தது, ஏதோ சிறப்பான ஒன்றை, சில நன்மைகளை, ஒரு பயணத்தை மேற்கொள்ள நாம் சிறப்பு விண்மீனை நம் வாழ்வில் காணாதிருக்கலாம், ஆனால், நாம் பார்க்க வேண்டுமென்று இறைவன் விரும்பும் விண்மீனைக் கண்டுகொள்வதற்கு அவரிடம் அருள் கேட்க வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
குழந்தை இயேசு தீவனத் தொட்டியில் பிறந்துள்ளார் என்ற செய்தியை வானதூதர்கள் இடையர்களுக்கு அறிவித்தனர், இறைவன் தம்மையே தாழ்த்திய நிகழ்வு இது, இயேசு குழந்தையின் தாழ்மை, நமக்கு மற்றொரு செய்தியை தெரிவிக்கின்றது, எனவே நம் வாழ்வும் தாழ்மையாகவும், அடக்கமாகவும் இருக்க வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்விரு அடையாளங்களும் நம் வாழ்வில் இல்லை, அதனால் நம்மை அடுத்த நிலைக்கு இட்டுச்செல்லும், இறைவன் விரும்பும் விண்மீனைக் காண இயேசுவிடம் வரம் கேட்போம், இறைவனின் கொடைகளாகிய இவ்விரு அடையாளங்களால் நம் வாழ்வு நிறைந்திருக்கட்டும் என்றும் கூறி அனைவருக்கும் ஆசிர் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பெத்லகேமில் நம் ஆண்டவர் இயேசுவின் பிறப்பு நிகழ்வைச் சித்தரிக்கும் வகையில், மாட்டுத் தீவனத் தொட்டியில் குழந்தை இயேசுவின் உருவத்தையும், விலங்குகளையும் வைத்து Greccio நகரில் ஒரு குகையில் 1223ம் ஆண்டு டிசம்பரில் முதல் கிறிஸ்மஸ் குடிலை அமைத்தார் தூய பிரான்சிஸ் அசிசியார். உரோம் நகருக்கு வடக்கே, Lazio மாநிலத்தில் குன்றுகள் நிறைந்த Greccio நகருக்கு, தனிப்பட்ட பயணமாக காரில் சென்று அங்கிருந்த பிரான்சிஸ்கன் சபை குழுவையும் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். கிரேச்சோவில் அந்தக் குகைத் திருத்தலத்தில் சிறிது நேரம் அமைதியாகச் செபித்த திருத்தந்தை, அதற்கு அருகிலிருக்கும் ஆலயத்தையும் பார்வையிட்டார். தல ஆயர் தொமேனிக்கோ பொம்ப்பிலி அவர்களுடன் உணவு அருந்தினார். அச்சமயத்தில் கிரேச்சோவுக்குத் திருப்பயணமாகச் சென்றிருந்த ஏறக்குறைய எழுபது பேர் கொண்ட இளையோர் குழுவையும் வாழ்த்தினார் திருத்தந்தை.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |