2016-01-05 15:25:00

கந்தமால் மறைசாட்சிகள் அறிவிப்புக்கு நடைமுறைகளைத் தொடங்கலாம்


சன.05,2016. கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்க்கு எதிராக இடம்பெற்ற வன்முறையில் கொல்லப்பட்டவர்களை, “கந்தமால் மறைசாட்சிகள்” என்று அறிவிப்பதற்கு இந்தியத் திருஅவை நடைமுறைகளைத் தொடங்க வேண்டுமென்று விரும்புவதாகத் தெரிவித்தார் மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.

கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களை முழுவதும் ஒழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில், 2008ம் ஆண்டில் கிறிஸ்தவர்க்கு எதிராக இடம்பெற்ற வன்முறையில், 90க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 56 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வீடுகளை இழந்தனர்.

இந்தக் கிறிஸ்தவ இன அழிப்பு வன்முறை குறித்து திருப்பீட புனிதர் நிலை பேராயத்திடம் தான் பேசியிருப்பதாகவும், இதில் கொல்லப்பட்ட கந்தமால் மறைசாட்சிகள் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் பேசுவதற்கு ஆவலாய் இருப்பதாகவும் Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார் கர்தினால் கிரேசியஸ். ஒடிசா தலத்திருஅவைத் தலைவரான கட்டாக்-புவனேஷ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்களிடம், கந்தமால் வன்முறையில் கொல்லப்பட்டவர்களை, மறைசாட்சிகள் என்று அறிவிப்பதற்கு நடைமுறைகளைத் தொடங்குமாறு கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார் கர்தினால் கிரேசியஸ்.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.