2016-01-04 14:31:00

நற்செய்தியிலிருந்து ஒரு பகுதியை தினமும் வாசிக்க வேண்டும்


சன.04,2016. இயேசுவை அறிவதற்கு, தினமும் நற்செய்தியிலிருந்து ஒரு பகுதியை வாசிக்க வேண்டும், அதனால் நாம் நம் இதயங்களை இயேசுவுக்குத் திறக்கவும், இயேசுவை பிறர் நன்கு அறியச் செய்யவும் முடியும் என்று இஞ்ஞாயிறன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின்னர் உரோம், இத்தாலி மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்திருந்த விசுவாசிகள், குடும்பங்கள், கழகங்கள், பங்குத்தளங்கள்   என, எல்லாருக்கும், இப்புதிய ஆண்டின் முதல் ஞாயிறன்று, ஆண்டவரின் அமைதி மற்றும் நன்மைத்தனம் நிறைந்த வாழ்த்துக்களை மீண்டும் சொல்வதாகத் தெரிவித்தார் திருத்தந்தை.

மகிழ்வான மற்றும் துன்பம் நிறைந்த நேரங்களில், நம் பரிவன்பும் நம்பிக்கையுமாக இருக்கும் ஆண்டவர் இயேசுவிடம் நம்மை அர்ப்பணிப்போம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 'அக்கறையின்மையைக் களைந்து, அமைதியை வெல்க' என்று உலக அமைதி நாளான புத்தாண்டு தினத்தன்று நாம் மேற்கொண்ட பணியை இப்போது நினைவுகூர்கிறேன், இறைவன் அருளால் அதை நாம் செயல்படுத்துவோம் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

மேலும், பல முறைகள் நான் உங்களுக்குக் கொடுத்த சிறிய நற்செய்தி நூலை பைகளில் வைத்து, அதில் ஒரு பகுதியை ஒவ்வொரு நாளும் வாசிக்க மறக்க வேண்டாமெனவும், இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில், நம் வாழ்வில் நற்செய்தி மிகவும் முக்கியத்துவம் பெற்றிருப்பதில் கவனம் செலுத்துவோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.