2016-01-04 14:17:00

தீமை குறித்து எப்போதும் விழிப்புடனிருக்க திருத்தந்தை அழைப்பு


சன.04,2016. நம் இதயங்களை இயேசுவுக்குத் திறந்து வைப்பதன் வழியாக, நம் வாழ்வை, தீமை வெற்றி அடையாது என்று இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார்  திருத்தந்தை பிரான்சிஸ். 

2016ம் ஆண்டின் முதல் ஞாயிறாகிய சனவரி 3ம் தேதியன்று, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளுக்கு, இவ்வாண்டின் முதல் நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

வாக்கு மனிதர் ஆனார், நம்மிடையே குடிகொண்டார் என்றுரைக்கும் தூய யோவான் நற்செய்தியின் முதல் பிரிவிலிருந்து எடுக்கப்பட்ட வாசகத்தை மையமாக வைத்து சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாக்கு ஒளியாக இருந்தாலும், மனிதர் இருளையே விரும்புகின்றனர், வாக்கு தம்மவரிடம் வந்தார், ஆனால் அவர்களோ அவரை ஏற்கவில்லை, இறைமகனின் முன்பாக, தங்கள் கதவுகளை மூடினர் என்றும் கூறினார்.

நம் வாழ்வைப் பாழ்படுத்துவது தீமை, எனவே அது நம் வாழ்வை வெற்றிகொள்ளாமல் இருப்பதற்கு நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, தீமையை நம்மில் அனுமதித்தால் நமக்கு ஐயோ கேடு என்றும் கூறினார்.

நாம் இயேசுவை வரவேற்றால், அவரின் அன்பிலும், அவரைப் புரிந்துகொள்வதிலும் வளர்வோம், இயேசு போன்று நாமும் இரக்கமுள்ளவர்களாக வாழ்வதற்குக் கற்றுக்கொள்வோம் என்றும் கூறினார் திருத்தந்தை.

சிறப்பாக, இந்த இரக்கத்தின் ஆண்டில், நம் வாழ்விலும் நற்செய்தி நம் சதையோடு ஒன்றியதாக மாறும்படிச் செய்வோம் என்றும் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.