2016-01-04 14:36:00

சிறந்த முப்பது நகரங்களில் மும்பை, டில்லி


சன.04,2016. பொருளாதார வலிமையில், உலகின் சக்தி வாய்ந்த முப்பது சிறந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் மும்பை, டில்லி நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

உலகில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தொழில் நிறுவனங்கள், சாலைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ள முப்பது நகரங்களில், ஜப்பான் தலைநகர் டோக்கியோ முதலிடத்தில் உள்ளது. மேலும், நியூயார்க், இலண்டன், பாரிஸ் ஆகிய நான்கு நகரங்கள், ஒட்டுமொத்த அன்னிய முதலீட்டில், ஐம்பது விழுக்காட்டிற்கும் அதிகமான பங்களிப்பைக் கொண்டுள்ளன. இந்தப் பட்டியலில், மும்பை, 22வது இடத்திலும், டில்லி 24வது இடத்திலும் உள்ளன.

இவ்வாறு அனைத்துலக ரியல் எஸ்டேட் நிறுவனமான JLL வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளாக மும்பையின் வளர்ச்சி, 7 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ளது. இதற்கு, மத்திய அரசின் நகர்ப்புற சீர்திருத்த திட்டங்கள் துணை புரிந்துள்ளன. பன்னாட்டு நிறுவனங்களின் சர்வதேச வர்த்தகத்திற்கு, மும்பை, மையப் புள்ளியாக விளங்குகிறது. அதனால், மும்பையில் தலைமை அலுவலகத்தை அமைக்க, பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.

சென்ற, 10 ஆண்டுகளில், மும்பையில் தலைமை அலுவலகத்தை அமைத்துள்ள பன்னாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை, 50 விழுக்காடு அதிகரித்து, 2,000க்கும் மேலாக உயர்ந்துள்ளது. மிலான், இஸ்தான்புல், தெஹ்ரான், மத்ரித், கெய்ரோ, ரியாத், லாகோஸ், ஜகார்த்தா, ஜெட்டா ஆகிய நகரங்களும் நல்ல வளர்ச்சி கண்டு வருகின்றன.

ஆதாரம் : தினமலர்/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.