2016-01-04 13:51:00

இது இரக்கத்தின் காலம் - அந்த நேரத்துப் பசியையாவது ஆற்றுங்கள்


அன்று சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இரவு 11.30 மணியளவில்  மனநிலை பாதிக்கப்பட்ட ஓர் இளம் பெண் ஆடைகளற்று நடைமேடையில் சுற்றித் திரிந்துகொண்டிருந்தார். அப்பெண்ணைப் பார்த்த பலர் ‘அய்யோ பாவம்’ என்று கடந்து சென்றார்கள். இன்னும் பலர் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு சென்றார்கள். அந்தப் பெண்ணை வைத்த கண் வாங்காமல் விழுங்கியவர்களும் உண்டு. ஆயினும், அக்கூட்டத்தில் இருந்த ஒரு நல்ல மனிதர், சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் வெங்கடேஷ் அவர்களின் கைபேசிக்குத் தொடர்புகொண்டு விவரத்தைச் சொன்னார். அடுத்த நிமிடமே வெங்கடேஷ் அவர்கள் சென்ட்ரல் இரயில்வே பாதுகாப்பு படைத் தலைவருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக அவர், பெண் காவலர்களுக்கு உத்தரவிட, சம்பவ இடத்துக்கு விரைந்த அவர்கள், அந்த இளம் பெண்ணை மீட்டனர். மஞ்சு என்ற அந்த இளம் பெண் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்தது. இப்போது அந்தப் பெண் சென்னை போரூரில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். திருவான்மியூரைச் சேர்ந்த வெங்கடேஷ், திருவொற்றியூரைச் சேர்ந்த வசந்தி ஆகிய இருவரும் மஞ்சுவைப் போல, ஆயிரக்கணக்கான ஆதரவற்றோரை மீட்டு காப்பகங்களில் சேர்க்கும் சேவையைச் செய்து வருகிறார்கள் என்று விகடனில் செய்தி வெளியாகியிருந்தது. இவ்விரு தன்னார்வலர்கள் சொல்கிறார்கள்:மனநிலை பாதிப்பு, உறவுகளின் புறக்கணிப்பு போன்ற காரணங்களால் ஒரு வேளை உணவுக்கும் வழியில்லாத நிலையில் இனி நீங்கள் யாரையாவது எதிர்கொண்டால், குறைந்தபட்சம் அவர்களின் அந்த நேரத்துப் பசியையாவது ஆற்றுங்கள். அதில் கிடைக்கும் திருப்தியும், புண்ணியமும் வேறு எதிலும் கிடைக்காது என்று. ஆம். இரக்கத்தின் காலம் விடுக்கும் இரக்கச் செயல்களில் ஒன்று பசித்திருப்பவரின் பசியை ஆற்றுவது. இயேசு சொல்கிறார்:நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்(மத்.25,35) என்று.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.