2016-01-02 15:35:00

விசுவாசத்திலிருந்து வளர்வது நம்பிக்கை, கொரிய கர்தினால்


சன.02,2016. இன்னும் அதிக நேர்மை, விசுவாசம் மற்றும் நம்பிக்கையுள்ள குழுவாக கொரிய சமுதாயம் மாற வேண்டும் என்று, புதிய ஆண்டு செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார் தென் கொரியக் கர்தினால் Andrew Yeom Soo-jung.

பிறந்திருக்கும் புதிய ஆண்டுக்கென வெளியிட்டுள்ள செய்தியில், விசுவாசத்திலிருந்து வளர்வது நம்பிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார் செயோல் பேராயர் கர்தினால் Yeom.

1866ம் ஆண்டில் கொரிய கத்தோலிக்க சமூகம் பெரிய அளவில் அடக்குமுறைகளால் துன்புற்றதன் 150வது ஆண்டு நிறைவு, இந்த 2016ம் ஆண்டில் நினைவுகூரப்படுவதை, தனது செய்தியில் குறிப்பிட்டுள்ள கர்தினால் Yeom அவர்கள், கொரியர்கள் கடவுளை மதிக்கவும், அடுத்திருப்பவரை அன்புகூரவும் மறைசாட்சிகள் கற்றுக்கொடுத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

துன்பங்கள், துயரங்கள் இருந்தபோதிலும், ஏழைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அயலாரைத் தேடிச் சென்று உதவுமாறும் கொரியர்களை வலியுறுத்தியுள்ளார் கர்தினால் Yeom.

வடக்கில் வாழும் கொரியர்கள் உட்பட, நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் மீட்பின் அருள் சென்றடைகின்றது என்றும், வட கொரியாவில் வாழும் கத்தோலிக்கத் திருஅவைக்காகச் செபிக்கும் செயோல் உயர்மறைமாவட்ட இயக்கத்தில் கத்தோலிக்கர் இணையுமாறும் கேட்டுள்ளார் கர்தினால் Yeom.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.