2016-01-02 15:04:00

திருத்தந்தை : இறைவனின் மன்னிப்பில் நம்பிக்கை வையுங்கள்


சன.02,2016. உரோம் தூய மேரி மேஜர் பசிலிக்காவில் புனிதக் கதவைத் திறந்து வைத்து திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலியின் இறுதியில், அப்பசிலிக்காவில் Salus Populi Romani அன்னை மரியா வணக்கம் செலுத்தப்பட்டுவரும் புனித பவுல் சிற்றாலயத்தின் கதவையும் திறந்து வைத்து, அன்னைக்கு மலர்கள் சாற்றி, தூபமிட்டுச் செபித்தார்.

பின்னர் இப்பசிலிக்காவின் புனிதக் கதவின்முன் நின்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் தூய அன்னையாகிய புனித கன்னி மரியா நம் அருகில் இருக்கிறார், நமக்காகப் பரிந்து பேசுகிறார் என்ற உணர்வில், இந்த இரக்கத்தின் புனிதக் கதவைக் கடந்து செல்வோம் என்று கூறினார்.

அவரது மகன் இயேசுவைச் சந்திப்பதில் இருக்கும் அழகை நாம் மீண்டும் கண்டுணர அத்தாய் நம்மை அழைத்துச் செல்ல நம்மை அனுமதிப்போம், நம் இதயக் கதவுகளை, மன்னிப்பின் மகிழ்வுக்கு அகலத் திறப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை.

பிள்ளைகளுக்குரிய அன்புடனும், பாசத்துடனும், நம் அன்னையை நோக்கி, இறைவனின் தூய அன்னையே என்று அனைவரும் சப்தமாக மூன்று முறை சொல்வோம் என்று விசுவாசிகளிடம் திருத்தந்தை கூற, அனைவரும் இறைவனின் தூய அன்னையே என்று சப்தமாக மூன்று முறை கூறினர். 

இறைவனின் மன்னிப்பில் நம்பிக்கை வையுங்கள், உங்கள் எல்லாருக்கும் புதிய ஆண்டு நல்வாழ்த்துக்கள் என்று சொல்லி, இத்திருவழிபாட்டை நிறைவுக்குக் கொணர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

431ம் ஆண்டில் எபேசு பொதுச் சங்கத்தில் மரியா இறைவனின் அன்னை என்று அறிவிக்கப்பட்ட பின்னர், திருஅவை வரலாற்றில் மரியாவுக்கென கட்டப்பட்ட முதல் ஆலயம் உரோம் தூய மேரி மேஜர் பசிலிக்காவாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.