2016-01-02 15:54:00

அமெரிக்க ஆயர்கள், கிழக்கு ஐரோப்பியத் திருஅவைகளுக்கு உதவி


சன.02,2016. மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பியத் திருஅவைகளில் இளையோர் உருவாக்கம், நற்செய்தி அறிவிப்பு, குடும்ப மேய்ப்புப் பணிகள் போன்ற 99 திட்டங்களுக்கு உதவுவதற்கு இசைவு தெரிவித்துள்ளனர் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் பேரவையின்(USCCB) மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பியத் திருஅவைகளுக்கு உதவும் கிளைக் குழு, 99 திட்டங்களுக்கு ஏறக்குறைய 25 இலட்சம் டாலர் உதவிக்கு இசைவு தெரிவித்துள்ளது.

சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்த பின்னர், அதைச் சேர்ந்த நாடுகள் செபத்திற்கும், ஆன்மீக வளர்ச்சிக்கும் இடங்களை உருவாக்குவதற்கு கஷ்டப்பட்டன என்றுரைத்த, அந்தக் கிளைக்குழுவின் தலைவர் சிகாகோ பேராயர் Blase J. Cupich அவர்கள், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பியத் திருஅவைகளின் மேய்ப்புப்பணி தேவைகளை நிறைவேற்றுவது உண்மையாகவே சவாலாக இருக்கின்றது என்று தெரிவித்தார்.

ஹங்கேரி நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள TeTe என்ற கழகத்தின் பெண்கள் நல முன்னேற்றம், இரஷ்யாவில் Irkutsk மறைமாவட்டத்தில் Albertine அருள்சகோதரிகளின் சிறார் காப்பகம் உட்பட, பல்வேறு திட்டங்களுக்கு உதவவிருப்பதாகக் கூறினார்  பேராயர் Blase J. Cupich.

ஆதாரம் : USCCB/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.