2016-01-01 14:17:00

புத்தாண்டு நாள் திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை


சன.01,2015. புத்தாண்டு நாளன்று கொண்டாடப்பட்ட இறைவனின் தாயான மரியன்னை பெருவிழாவின் திருப்பலியை, காலை 10 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வேளையில் வழங்கிய மறையுரை: 

அன்பு சகோதர, சகோதரிகளே, "காலம் நிறைவேறியபோது கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார்" (கலாத்தியர் 4: 4) என்று திருத்தூதர் பவுல் கூறிய வார்த்தைகளைக் கேட்டோம்.

'நிறைவேறிய காலத்தில்' இயேசு பிறந்தார் என்பதன் பொருள் என்ன? அன்றைய வரலாற்றை எண்ணிப் பார்த்தால், நாம் மனமுடைந்து போவோம். உரோமைய அரசு, அன்றைய உலகின் பெரும் பகுதியை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள், தங்கள் சுதந்திரத்தை இழந்திருந்தனர். இயேசு வாழ்ந்த காலம், நல்லதொரு காலம் அல்ல. எனவே, நிறைவேறிய காலம் என்பதன் பொருளை, அன்று நிலவிய அரசியல், சமுதாய நிலைகளிலிருந்து வரையறுக்கக் கூடாது.

'நிறைவேறிய காலம்' என்ற சொற்களை, இறைவனின் கண்ணோட்டத்தில் பொருள் காண வேண்டும். வரலாறு, கிறிஸ்துவின் பிறப்பைத் தீர்மானிக்கவில்லை; மாறாக, அவரது வருகை, உலக வரலாற்றை தீர்மானம் செய்து, நிறைவுக்குக் கொணர்ந்தது. எபிரேயருக்கு எழுதப்பட்டத் திருமுகம் இதனை இவ்வாறு கூறுகிறது: “பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள்,  இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார்.  கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப் படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.” (எபிரேயர் 1: 1-3)

கடவுளின் பிரசன்னத்தால், காலம் நிறைவேறுகிறது. இருப்பினும், இந்த மறைபொருள், மனித வரலாற்றுடன் தொடர்ந்து முரண்பட்டு வருகிறது. நடைபெறும் அநீதியும், வன்முறையும், நிறைவேறிய காலத்தை மறைத்து விடுகின்றன. போர், பட்டினி, பெரும் இன்னல்கள் ஆகியவற்றால், ஆண், பெண், குழந்தைகள் ஆயிரமாயிரமாய் சிதறுண்டு போகும்போது, காலம் நிறைவேறியுள்ளது என்று எவ்வாறு கூறமுடியும்? வெள்ளமாய் பெருகும் துயரங்கள், கிறிஸ்து கொணர்ந்த நிறைவுற்ற காலத்தை அழித்து விடுவதுபோல் தெரிகிறது.

இருப்பினும், துயரங்களின் வெள்ளம், இரக்கம் என்ற பெரும்கடல் முன் சக்தியிழந்து போகிறது. இந்தப் பெரும்கடலில் மூழ்கி, மறுபிறப்படைய நாம் அழைக்கப்பட்டுள்ளோம். மனித குலம் ஒருங்கிணைவதைத் தடுக்கும் அக்கறையற்ற நிலையை வெல்வதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம். நமது மீட்பை நிறைவுக்குக் கொணரும் கிறிஸ்துவின் அருள், இன்னும் நீதி மிகுந்த, உடன்பிறந்த உணர்வு கொண்ட சமுதாயத்தை உருவாக்கவும், இறைவன் படைத்த இயற்கையோடு இயைந்து செல்லும் வாழ்வை மேற்கொள்ளவும் நம்மை வழிநடத்திச் செல்கிறது.

புதிய ஆண்டின் துவக்கத்தில், அமைதியின் அடையாளமாய் விளங்கும் இறைவனின் அன்னையாம் மரியாவைத் தியானிக்க, திருஅவை நம்மை அழைக்கிறது. வானதூதரின் வார்த்தைகளை ஏற்று, மரியா, "ஆம்" என்று சொன்னதால், காலம் நிறைவேறியது. நாம் இப்போது செவிமடுத்த நற்செய்தியில், "மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்" (லூக்கா 2:19) என்று கேட்டோம்.

இயேசுவின் நினைவுகளை விளிம்புவரை சுமந்த ஒரு பாத்திரமாக மரியன்னை வாழ்ந்தார். ஞானத்தின் உறைவிடமான அந்த அன்னையை நாடினால், நம்மைச் சுற்றி நடப்பனவற்றைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவோம். நம் தனிப்பட்ட வாழ்வில், குடும்பங்களில், இவ்வுலகில் நடக்கும் நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள அன்னை மரியா நமக்கு உதவி செய்கிறார்.

அறிவுத் திறன் கொண்டு புரிந்துகொள்ள முடியாத, அரசியல் பேச்சு வார்த்தைகளால் தீர்க்க முடியாத விடயங்களை நம்பிக்கையின் சக்திகொண்டு புரிந்துகொள்ள முடியும். புதிய வழிகளை, புதிய சமரசங்களை, கிறிஸ்துவின் நற்செய்தி கொணரும்.

இறைமகனை இவ்வுலகிற்கு அளித்த மரியே, நீர் பேறுபெற்றவர். இறைவனை நம்பியதால், நீர் மேலும் பேறுபெற்றவர் ஆனீர். முழு நம்பிக்கையோடு நீர் இயேசுவை உம் உதரத்தில் தாங்குவதற்கு முன், உள்ளத்தில் தாங்கினீர்; அதனால், விசுவாசிகள் அனைவரின் தாயாக விளங்குகின்றீர் (புனித அகஸ்தின் மறையுரை 215,4). உமக்காக அர்ச்சிக்கப்பட்டுள்ள இந்நாளில், எங்கள் அனைவருக்கும் உமது ஆசீரை வழங்கும். உலகமனைத்திற்கும் இரக்கத்தையும், அமைதியையும், வழங்கும் உம மகன் இயேசுவின் முகத்தை எங்களுக்குக் காட்டியருளும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.