2016-01-01 13:55:00

ஒன்றுகூடி இறைவனுக்கு புகழ்பாடுவது, மிகவும் அர்த்தமுள்ளது


சன.,01,2016. ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31ம் தேதி, வியாழனன்று, உரோம் நேரம் மாலை 5 மணிக்கு, இந்திய நேரம் இரவு 9.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் நன்றித் திருவழிபாட்டை நடத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ். 2015ம் ஆண்டில் நம்மை வழிநடத்திச் சென்ற இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக, ஆண்டின் இறுதி நாளில் நடத்தப்பட்ட ‘Te Deum’ என்ற இந்த நன்றி வழிபாட்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரையின் சுருக்கத்தை இப்போது தருகிறோம்:

ஆண்டின் இந்த இறுதி நாளில் நாமனைவரும் ஒன்றுகூடி இறைவனுக்கு புகழ்பாட வந்துள்ளது, மிகவும் அர்த்தமுள்ளதாக உள்ளது. திருஅவை, பலவேளைகளில் தன் கையை உயர்த்தி, இறைபுகழ் பாடவேண்டிய கடமையையும் மகிழ்வையும் உணர்ந்துள்ளது. நம் இவ்வுலக வாழ்வுப் பயணத்தில் இந்த முக்கிய நன்றியறிதல் நேரம், செபங்களுடன் 4ம் நூற்றாண்டிலிருந்தே பழக்கத்தில் உள்ளது.

நம் வரலாற்று நிகழ்வுளில் இறைவனின்  அன்புடன் கூடிய இருப்பை ஏற்கும் விதமாக நம் செபங்களில் இந்த நன்றியறிவிப்பின் மகிழ்வு இயல்பாகவே வழிந்தோடுகிறது. நாம் தனித்தனி குரலாக இறைவனுக்கு நன்றி கூறுவதைவிட, ஒரே குரலாக, வான தூதர்கள், இறைவாக்கினர்கள் மற்றும் அனைத்துப் படைப்புகளோடும் இணைந்து இறைவனுக்கு நன்றி பாடல் பாடுவோம்.

'இரக்கம் நிறை கடவுளே, எங்களோடு என்றும் இருந்தருளும், ஏனெனில், உம்மில் யாம் எம் நம்பிக்கையை வைத்துள்ளோம்" என திருஅவை இந்த ஆண்டின் இறுதி நாளில் பாடுவது, இரக்கத்தின் யூபிலி ஆண்டில் சிறப்பு அர்த்தத்தைக் கொண்டுள்ளது. நாம் எப்படி வாழ்ந்தோம், எப்படி வாழப்போகிறோம் என்பதைப் புரிந்துகொள்ள, இறை இரக்கம் நமக்கு உதவுகிறது. நம் கடந்த காலத்தைக் குறித்து எண்ணும்போது, இன்பங்களும் துன்பங்களும் எண்ணத்தில் வருவதோடு, இறைவன் நமக்கருகில் இருந்ததும் தெரிகிறது. அதேவேளை, நாம் கடவுளின் திட்டத்திற்கு இயைந்த வகையில் நம் வாழ்வை நடத்தினோமா, அல்லது இவ்வுலகப் போக்கின்படி, அதிகாரம் மற்றும் வன்முறைகளுக்கான தாகத்துடன் செயல்பட்டோமா என சிந்திப்போம்.

இதையெல்லாம் தாண்டி, இறைவனின் இரக்கம் நிறை அன்பு குறித்து நம் பார்வையைத் திருப்புவோம். கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறை, மரணங்கள், அப்பாவி மக்களின் துயர், அகதிகளின் துன்பப் பயணங்கள் ஆகியவற்றை மறக்க முடியாது. அதேவேளை, பல்வேறு இரக்க நடவடிக்கைகளும், உதவிகளும் இடம்பெற்றுள்ளதையும் மறுக்கமுடியாது. இந்த நல்செயல்கள், சமூகத்தொடர்பு சாதனங்களில் வராமலிருந்திருக்கலாம். ஆனால், நன்மைத்தனமே எப்போதும் வெல்லும் என்பதை நினைவில் கொள்வோம்.

உலகின் இத்தகைய நிலைகள், உரோம் நகருக்கும் புதிதல்ல. துன்ப நிலைகளைத் தாண்டி நாம் முன்னோக்கிச் செல்வோம் என நான் ஆவல் கொள்கிறேன். கடந்து செல்லும் ஆண்டின் குறைபாடுகள் அனைத்தையும் நிவர்த்திச் செய்யும் நோக்கில், மதிப்பீடுகளை மீண்டும் கொணர்வதற்கான நம் முயற்சிகள் வெற்றி காணட்டும். கிறிஸ்தவ சாட்சியத்தின் நேர்மறை பங்களிப்பை கைவிட்டு விடாதீர்கள்.  உரோம் நகரும் அதைத் தொடரட்டும். விசுவாசம், இன்முக வரவேற்பு, சகோதரத்துவம் மற்றும் அமைதியின் செயல் வீரர்களாக என்றும் இருப்போம்.

எம் நம்பிக்கையாக இருக்கும் இறைவா,  உம்மை நோக்கி புகழ்ந்து பாடுகிறோம். நாங்கள் ஒரு போதும் குழப்பத்துடன் அதிர்ச்சிக்கு உள்ளாக மாட்டோம்.

இவ்வாறு ‘தே தேயும்’ என்ற ஆண்டிறுதி நன்றி நவிலும் திருவழிபாட்டின்போது மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.