2015-12-31 15:56:00

திருத்தந்தை - பாடுவது நமது ஆன்மாவுக்கு நலம் தரும்


டிச.31,2015. இசை நம் இதயத்தைப் பதப்படுத்துகிறது; பாடுவது நமது ஆன்மாவுக்கு நலம் தரும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை தன்னைச் சந்திக்கக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான இளம் பாடகர்களிடம் கூறினார்.

Pueri Cantores என்ற பெயருடன் உலகின் பல நாடுகளில் இயங்கிவரும் இளையோர் பாடகர் குழுக்களைச் சேர்ந்த 6000த்திற்கும் அதிகமான பாடகர்களை, இவ்வியாழன் காலை, அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்தத் திருத்தந்தை, தாங்கள் பாடியது திருத்தந்தைக்குப் பிடித்திருந்ததா என்று அவர்கள் கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலிறுத்தார்.

தனக்குப் பாடும் திறமை இல்லையென்றும், தன்னுடைய தாத்தா, பணிசெய்த நேரங்களில் பாடினார் என்றும், தன்னுடைய தாய், இசைமீது தனக்குள்ள ஆர்வத்தைத் தூண்டிவிட்டார் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் வாழ்விலிருந்து சில அனுபவங்களை இளையோருடன்  பகிர்ந்துகொண்டார்.

திருத்தந்தையால் எப்படி இவ்வளவு நல்லவராக இருக்க முடிகிறது? அவருக்குக் கோபமே வராதா? புத்தாண்டில் அவர் எடுத்திருக்கும் உறுதி மொழிகள் எவை? என்பன, இளையோர், திருத்தந்தையிடம் எழுப்பிய சில கேள்விகளாக இருந்தன.

தனக்கும் கோபம் வரும் என்பதை ஒத்துக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கோபம் என்ற நஞ்சு தன் ஆன்மாவைக் கெடுத்துவிடாமல் காக்க, இறைவனின் துணையை தான் அடிக்கடி நாடுவதாகவும் எடுத்துரைத்தார்.

ஒவ்வொரு நாளும் ஊடகங்கள் காட்டிவரும் வன்முறையான, குற்றம் நிறைந்த உலகை, உண்மை உலகம் என்று நம்பக்கூடாது என்று இளம் பாடகர்களிடம் கூறிய திருத்தந்தை, நம் ஒவ்வொருவருக்குள்ளும் நன்மை, தீமை என்ற இரண்டு பக்கங்கள் எப்போதும் போட்டியிட்ட வண்ணம் உள்ளன என்றும், நாம் எந்தப் பக்கத்தை ஆதரிக்கிறோமோ அதுவே நம்மை மாற்றுகிறது என்றும் விளக்கினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.