2015-12-30 14:50:00

திருத்தந்தையின் மறைக்கல்வி – குழந்தை இயேசு கொணரும் செய்தி


டிச.30,2015. கிறிஸ்மஸ் பெருவிழாக் காலத்தில், அதுவும், இவ்வாண்டின் இறுதி புதனன்று, தூய பேதுரு வளாகத்தில் விசுவாசிகளை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கோவில்களிலும், பல வீடுகளிலும் இந்நாட்களில் அமைக்கப்பட்டுள்ள குடில் குறித்து எடுத்துரைத்து, இயேசு, ஒரு குழந்தையாக நம்மிடம் எதிர்பார்ப்பது பற்றி தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

அசிசியின் புனித பிரான்சிஸ் துவக்கி வைத்த கிறிஸ்மஸ் குடில் அமைக்கும் பாரம்பரியத்தைப் பின்பற்றி, இன்று பல இடங்களில், பல வீடுகளில், இப்புனித காலத்தில், குடில் அமைப்பதைக் கண்டு வருகிறோம். கடவுளின் மீட்பளிக்கும் அன்பின் வெளிப்பாடாக இருக்கும் மனுவுரு எனும் மறையுண்மையைக் குறித்து ஆழ்ந்து தியானிக்கவும், குழந்தை இயேசுவை வணங்கவும், குடிலில் நாம் காணும் காட்சி நமக்கு அழைப்பு விடுக்கின்றது. குழந்தை இயேசு மீது நாம் காட்டும் பக்தி வழிபாடு, நம் விசுவாசத்தைக் குறித்து நமக்கு பல விடயங்களைக் கற்றுத்தருகிறது. இயேசுவின் குழந்தைப் பருவம் குறித்து, நற்செய்தி நூல் மிகக் குறைவாகவே பேசுகின்ற போதிலும், ஒவ்வொரு குழந்தையும், தான் பிறக்கும்போது கொண்டுவரும் செய்தி குறித்து, நம் அனுபவங்கள் வழியாக நாம் தெரிந்தே வைத்துள்ளோம்.

குழந்தை இயேசுவைக் குறித்து நாம் ஆழமாக தியானிப்பதன் வழியாக, அவர் நம்மிடையே வந்ததன் அர்த்தத்தை முழுமையாக புரிந்துகொள்கிறோம். ஒவ்வொரு குழந்தையையும் போலவே, குழந்தை இயேசுவும் நம் கவனத்தை ஈர்க்க விரும்புகிறார், அவர் மீது அக்கறை எடுத்து அவரை பாதுகாக்க வேண்டும் என கேட்கிறார். அவரின் அன்பின் மறையுண்மையை பகிர்தல், மற்றும், அவரில் நாம் கொள்ளும் மகிழ்ச்சி, ஆகியவற்றின் அடையாளமாக நாம் அவரை நோக்கி புன்முறுவல் பூக்கவேண்டும் என, மற்ற குழந்தைகள் போலவே, குழந்தை இயேசுவும் ஆவல் கொள்கிறார். இறுதியாக, நாம் அவருடன் விளையாடவேண்டும் எனவும் குழந்தை இயேசு விரும்புகிறார். அவருக்கு மகிழ்வூட்டும் விதமாக நாமும் குழந்தைகளாக மாறி, அவர் உலகிற்குள் நுழைந்து, அவருடன் விளையாட வேண்டும் என்பது அவரின் ஆவல்.  இந்த கிறிஸ்மஸ் காலத்தில், குழந்தை இயேசு மீது நம் பார்வையைச் செலுத்துவதோடு நிறுத்திவிடாமல், இறைத்தந்தையின் கருணைநிறை அன்பிலிருந்து பிறக்கும், விடுதலை மற்றும் மகிழ்ச்சியினை, இக்குழந்தை நமக்குத் தருவதற்கு அனுமதிக்கும் வண்ணம், அவரை நம் கைகளில் ஏந்துவோம்.  

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட அமெரிக்க ஐக்கிய நாடு, பிரிட்டன், தென் அமெரிக்கப் பகுதி, குறிப்பாக பராகுவாய், ஆகிய நாடுகளூக்காக செபிக்குமாறு அழைப்பு விடுத்தார். இறுதியில், தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்குவதற்கு முன்னால், அனைவருக்கும் தன் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.