2015-12-30 15:15:00

உலக ஆயர்கள் மன்றம் இரக்கத்தின் யூபிலிக்கு தகுந்த முன்னோடி


டிச.30,2015. குடும்பத்தை மையப்படுத்தி, கடந்த இரு ஆண்டுகள் வத்திக்கானில் நடைபெற்ற ஆயர்கள் சிறப்பு மாமன்றமும் உலக ஆயர்கள் பொது மன்றமும் அவற்றைத் தொடர்ந்து வந்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டுக்கு தகுந்த முன்னோடிகளாக அமைந்தன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலரான, கர்தினால் லொரென்சோ பால்திசேரி (Lorenzo Baldisseri) அவர்கள், வத்திக்கான் நாளிதழ் ‘L'Osservatore Romano’வுக்கு அளித்த பேட்டியில், ஆயர்கள் மாமன்றத்தையும், இரக்கத்தின் யூபிலியையும் இணைத்து, தன் கருத்துக்களை வழங்கினார்.

"அனைவரும் இணைந்து பயணிப்பது" என்ற கருத்தை அடிக்கடி வலியுறுத்தி வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணிக்காலத்தில், ஆயர்கள் மாமன்றம் தனி இடத்தையும், பொறுப்பையும் பெற்றுள்ளது என்று கர்தினால் பால்திசேரி அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

இரக்கம் என்ற பண்பு அதிகமாக வெளிப்படும் இடமாக குடும்பங்கள் விளங்குவதாலும், ஒவ்வொரு குடும்பமும், குறுகிய வட்டங்களைக் கடந்து, மனிதக் குடும்பம் என்ற பரவலான குடும்பத்தைக் குறித்து சிந்திக்க வேண்டும் என்பதாலும், குடும்பங்களுக்கும், இரக்கத்தின் யூபிலிக்கும் நெருங்கியத் தொடர்பு உள்ளது என்று கர்தினால் பால்திசேரி அவர்கள் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.