2015-12-28 16:02:00

திருக்குடும்பம், நற்செய்தியின் ஓர் உண்மையான கல்விக்கூடம்


டிச.28,2015. இயேசு, மரியா, யோசேப்பு ஆகிய மூவரைக் கொண்ட திருக்குடும்பம், ஒவ்வொரு விசுவாசிக்கும், குறிப்பாக, குடும்பங்களுக்கு நற்செய்தியின் ஓர் உண்மையான கல்விக்கூடம் என்று இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருக்குடும்ப விழாவான இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு குடும்பமும், திருக்குடும்பத்தின் எடுத்துக்காட்டான மற்றும் சான்று வாழ்விலிருந்து, மதிப்புமிக்க வழிகாட்டுதலைப் பெற முடியும் என்று கூறினார்.

குடும்பத்தை, வாழ்வு மற்றும் அன்பின் சிறப்புக் குழுவாக அமைப்பதற்கு இறைவன் வகுத்துள்ள திட்டம் நிறைவேறுவதை திருக்குடும்பத்தில் நாம் கண்டு வியக்கிறோம், இவ்வாறு ஒவ்வொரு கிறிஸ்தவக் குடும்பமும், இல்லத் திருஅவையாக வாழ்வதற்கு, திருக்குடும்பத்திலிருந்து கற்றுக்கொள்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவக் குடும்பங்கள், பல்வேறு சூழல்களில் புரிந்துகொள்ளாமை மற்றும் இன்னல்களை எதிர்கொள்ளும் இக்காலத்தில், குடும்பத்தின் மதிப்பு பற்றிய சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, குழந்தை, இறைவனின் கொடையாக வரவேற்பதற்கு, நம் அன்னை மரியாவும் யோசேப்பும் நமக்குக் கற்றுத் தருகின்றனர் என்றும் கூறினார்.  

ஒன்றிணைந்த குடும்பங்களில், சிறார் தங்களின் வாழ்வை, முழு பக்குவமடைந்த நிலைக்கும், அர்த்தமுடன் வாழ்வதற்கும், அன்பைச் சுதந்திரமாகக் கொடுப்பதற்கும் பெறுவதற்கும், கனிவு, ஒருவர் ஒருவரை மதித்தல், புரிந்துகொள்ளல், மன்னிப்பு, மகிழ்வு ஆகியவற்றில் வளர்வதற்கும் கற்றுக் கொள்கின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இம்மூவேளை செப உரைக்கு முன்னர் குடும்பங்களை வாழ்த்திப் பாடிய சிறார் குழுவுக்குத் தனது நன்றியையும் தெரிவித்தார் திருத்தந்தை. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.