2015-12-28 16:15:00

குடும்பத்தின் ஒவ்வொரு நாள் திருப்பயணம் முக்கியமான மறைப்பணி


டிச.28,2015. குடும்பத்தின் ஒவ்வொரு நாள் திருப்பயணம், முக்கியமான மறைப்பணி, இது, உலகுக்கும், திருஅவைக்கும் எக்காலத்தையும்விட இக்காலத்திற்கு அதிகம் தேவைப்படுகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறன்று கூறினார்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், திருக்குடும்ப விழாவான இஞ்ஞாயிறன்று குடும்பங்களின் யூபிலிக் கொண்டாட்டம் சிறப்பிக்கப்பட்டதை முன்னிட்டு, இஞ்ஞாயிறு காலையில், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மறையுரையில் இவ்வாறு கூறினார்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெற்றோரும், பிள்ளைகளும், தாத்தா பாட்டிகளும் கலந்து கொண்ட இத்திருப்பலியில், திருப்பயணம், செபம், பகிர்தல், ஒருவர் ஒருவரை மன்னித்தல் ஆகியவற்றைக் கற்றுக்கொள்ளும் இடமாக குடும்பங்கள் அமைய வேண்டுமென்று செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குடும்பத்தின் வாழ்வு, ஒரு பொதுவான இலக்கை நோக்கிச் செல்லும் அன்றாடத் திருப்பயணமாக உள்ளது என்று அடிக்கடி இம்மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை, நாம் எல்லாரும் ஒன்றுசேர்ந்து நடக்கவேண்டிய ஒரு பாதை உள்ளது என்று அறிந்துள்ளோம், இந்தப் பாதையில் இன்னல்களைச் சந்திக்கிறோம், அதேநேரம், மகிழ்வு மற்றும் ஆறுதலான நேரங்களும் உள்ளன என்றும் கூறினார்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், இத்திருப்பயணத்தில், மன்னிப்பின் மகிழ்வை அனுபவிக்கும் இடமாக ஒவ்வொரு கிறிஸ்தவக் குடும்பமும் மாற வேண்டும், மன்னிப்பே அன்பின் சாரம், அன்பே தவறுகளைப் புரிந்துகொண்டு அவற்றைத் திருத்தும் என்றுரைத்த திருத்தந்தை, கடவுள் நம்மை மன்னித்திராவிட்டால், நம் வாழ்வு எவ்வளவு துயரம் நிறைந்ததாய் மாறியிருக்கும் என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

குடுபம்பங்களில் நாம் நம்பிக்கையை இழக்காதிருப்போம் என்றுரைத்த திருத்தந்தை, நாம் நம் இதயங்களைப் பிறருக்கு எப்போதும் திறந்து வைக்கும்போது அவை எவ்வளவு அழகானதாக இருக்கும், அன்பு எங்குளதோ அங்கே புரிந்துகொள்தலும் மன்னிப்பும் இருக்கும் என்று கூறினார்.

ஒவ்வொரு நாள் குடும்ப வாழ்வும், இல்லத் திருப்பயணம் என்ற மிக முக்கியமான மறைப்பணியை, அனைத்துக் குடும்பங்களிடம் சமர்ப்பிப்பதாக மறையுரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.