2015-12-26 13:53:00

திருக்குடும்பத் திருவிழா - ஞாயிறு சிந்தனை


கிறிஸ்மஸ் காலம் குடும்ப உணர்வை வளர்க்கும் ஓர் அழகிய காலம். கிறிஸ்துபிறப்புப் பெருவிழாவைத் தொடர்ந்துவரும் ஞாயிறன்று திருக்குடும்பத் திருவிழாவைக் கொண்டாட திருஅவை நம்மை அழைக்கின்றது. திருக்குடும்பத் திருவிழா உருவான வரலாற்றை நான் பின்னோக்கிப் பார்த்தபோது, என் மனதில் எழுந்த எண்ணங்களை முதலில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இரண்டாவதாக, திருக்குடும்பம் எதிர்கொண்டதாக இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கும் பிரச்சனையைப் பற்றி சிந்திப்போம். மூன்றாவதாக, இந்த நற்செய்தி நிகழ்ச்சி நமக்கு நினைவுறுத்தும் இன்றைய பிரச்சனைகளையும் நாம் சிந்திப்போம்.

பல நூற்றாண்டுகளாக, திருக்குடும்பத் திருநாள் தனிப்பட்ட ஒரு பக்தி முயற்சியாக துறவற சபைகளால் வளர்க்கப்பட்டு வந்தது. 1893ம் ஆண்டு திருத்தந்தை 13ம் லியோ அவர்களால் திருஅவையின் திருவிழாவாக இது அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு சில ஆண்டுகளில் இத்திருவிழா திருவழிபாட்டிலிருந்து நீக்கப்பட்டது. 1921ம் ஆண்டு திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களால் இத்திருவிழா மீண்டும் திருவழிபாட்டின் ஓர் அங்கமாக இணைக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு. அதுதான், அப்போது நடந்து முடிந்திருந்த முதல் உலகப்போர். 1918ல் நடந்து முடிந்த உலகப்போரில் ஆயிரமாயிரம் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. வீட்டுத் தலைவனையோ, மகனையோ போரில் பலிகொடுத்த பல குடும்பங்கள் ஆழ்ந்த துயரத்தில், அவநம்பிக்கையில் மூழ்கியிருந்தன. இக்குடும்பங்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தரும் வகையில் திருக்குடும்பத் திருநாளை மீண்டும் அறிமுகப்படுத்தி, குடும்பங்களைக் கட்டியெழுப்ப திருஅவை முயன்றது.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் 50ம் ஆண்டு நிறைவை நாம் இப்போது இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டாகக் கொண்டாடி வருகிறோம். 1962ம் ஆண்டு துவங்கிய இப்பொதுசங்கத்தின்போது திருக்குடும்பத்தைப் பற்றிய எண்ணங்களை திருஅவை மீண்டும் புதுப்பித்தது. இதற்கு முக்கிய காரணம், அன்றைய உலகின் நிலை. முதலாம், இரண்டாம் உலகப் போர்களால், கட்டிடங்கள் பல சிதைந்தது உண்மை. ஆனால், அதைவிட, குடும்பங்கள் அதிகமாகச் சிதைந்திருந்தன... வேறு பல வடிவங்களில் குடும்பங்கள் தினசரி போர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. தொழில் மயமான உலகம், அறிவியல் முன்னேற்றங்கள் என்று பல வழிகளில் உலகம் முன்னேறியதைப் போலத் தெரிந்தது. ஆனால், அதேவேளை, குடும்பம் என்ற அடித்தளம், நிலை குலைந்தது. ஹிப்பி கலாச்சாரம், போதைப் பொருட்களின் பரவலான பயன்பாடு என்று, மக்கள் வீட்டுக்கு வெளியே நிம்மதியைத் தேடி அலைந்தனர். அந்த அமைதியை, அன்பை வீட்டுக்குள், குடும்பத்திற்குள் தேடச்சொன்னது திருஅவை. குடும்ப உணர்வுகளை வளர்க்கும் கிறிஸ்மஸ் பெருவிழாவைத் தொடர்ந்துவரும் ஞாயிறை, திருக்குடும்பத் திருவிழாவாக அறிவித்தது, திருஅவை.

திருக்குடும்பம் ஒரு தலைசிறந்த குடும்பம். அந்தக் குடும்பத்தில் வாழ்ந்த இயேசு, மரியா, யோசேப்பு அனைவரும் தெய்வீகப் பிறவிகள். அவர்களைப் பீடங்களில் ஏற்றி வணங்க முடியும். அவர்களை வைத்து விழாக்கள் கொண்டாட முடியும். ஆனால், அந்தக் குடும்பத்தைப்போல் வாழ்வதென்றால்... நடக்கக்கூடிய காரியமா? இது பொதுவாக நமக்குள் எழும் ஒரு தயக்கம்.

இயேசு, மரியா, யோசேப்பு என்ற மூன்று புனிதப் பிறவிகளால் உருவான அக்குடும்பம், எந்நேரமும் அமைதியாக, மகிழ்வாக எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வந்ததாக நினைக்கவேண்டாம். அவர்கள் மத்தியிலும் பிரச்சனைகள் இருந்தன. அவர்கள் அந்தப் பிரச்சனைகளைச் சந்தித்த விதமும், அவற்றிற்குத் தீர்வு கண்டவிதமும் நமக்குப் பாடங்களாக அமையவேண்டும். திருக்குடும்பம் சந்தித்த ஒரு பிரச்னையை இன்றைய நற்செய்தி நமக்கு எடுத்துரைக்கிறது. பெற்றோருடன் எருசலேம் கோவிலுக்குச் செல்லும் சிறுவன் இயேசு, அவர்களுக்குத் தெரியாமல் அங்கேயேத் தங்கிவிடும் நிகழ்வு, இன்றைய நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளது. - லூக்கா நற்செய்தி 2: 41-52

ஒரு குடும்பத்தில் குழந்தை ஒன்று பிறந்ததும், பெற்றோர், முக்கியமாக தாய், தனது தினசரி வாழ்க்கையை அந்தக் குழந்தைக்காக அதிகம் மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இந்த மாற்றங்கள் பெரும்பாலும் உடல் ரீதியாக எழும் சவால்கள். இதே குழந்தை, ‘டீன் ஏஜ்’ (Teenage) என்றழைக்கப்படும் வளர் இளம் பருவத்தில் அடியெடுத்து வைக்கும்போது, பெற்றோர் மீண்டும் பல மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டும். இந்த மாற்றங்கள் பெரும்பாலும் மனதளவில், வளரும் பிள்ளையைப் புரிந்து கொள்வதில் எழும் சவால்களாக இருக்கும்.

நமது குடும்பங்களில் ஒரு மகளோ, மகனோ தோளுக்கு மேல் வளர்ந்ததும், தாங்கள் தனித்து வாழமுடியும் என்பதை எப்படி உணர்த்துவர்?... தங்களுக்குரிய மரியாதையை மற்றவர்கள் கொடுக்க வேண்டுமென எதிர்பார்ப்பர். 12 வயதைத் தாண்டி, ‘டீன் ஏஜ்’ வயதில் காலடி எடுத்து வைத்துவிட்டதால், தன்னை மற்றவர்கள் இனிமேல் கேள்விகள் கேட்டு தொல்லைப்படுத்துவதை விரும்பமாட்டார்கள்.

"'நான் எங்கிருந்து வந்தேன்?' என்ற 'அப்பாவித்தன'மானக் கேள்வியை எழுப்பிவரும் வரை நம் மகனோ, மகளோ தன் குழந்தைப் பருவத்தைத் தாண்டவில்லை என்பதை நாம் உணரலாம். 'நீ எங்கே போயிருந்தாய்?' என்ற கேள்வியை எப்போது அவர்கள் விரும்பவில்லையோ, அப்போது அவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தைக் கடந்துவிட்டார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்" என்று அருள்தந்தை Ernest Munachi அவர்கள் கூறியுள்ளார். எங்கே போனாய், என்ன செய்தாய், ஏன் இவ்வளவு ‘லேட்’டாக வருகிறாய்... போன்ற கேள்விகளை இனி தங்களிடம் கேட்கக்கூடாது என்பதை நேரடியாகச் சொல்லாமல், தங்கள் நடத்தையினால் ‘டீன் ஏஜ்’ இளையோர் உணர்த்துவர்.

இதுவரைத் தங்களைச் சுற்றி நாடும், வீடும் கட்டியிருந்த வேலிகளைத் தாண்டுவதில், அல்லது அந்த வேலிகளை உடைத்து வெளியேறுவதில் ‘டீன் ஏஜ்’ இளையோர் குறியாய் இருப்பார்கள். அந்த நேரத்தில் குடும்பங்கள் அவர்களைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல், அவர்கள் வாழ்வையே கேள்விக்குறியாக மாற்றும்போது, அவர்களது தோழர்கள், தோழிகள், சொல்வது, குடும்பத்தினர் சொல்வதைவிட முக்கியமாகிப் போகும். இந்த மாற்றங்கள், பல நேரங்களில், பெற்றோருக்குப் பிரச்சனைகளை, புதிய சவால்களை உருவாக்கும்.

அன்று எருசலேமில் நடந்ததாக இன்றைய நற்செய்தியில் நாம் வாசிப்பதும், வளர் இளம் பருவத்தில் அடியெடுத்துவைத்த ஓர் இளையவரைப் பற்றியதே. 12 வயதை நிறைவு செய்த ஆண்மகனை, கோவிலுக்கு முதன்முறையாக அதிகாரப் பூர்வமாகக் கூட்டிச்செல்லும் வழக்கம் யூதர்கள் மத்தியில் இருந்தது. 12 வயதுக்கு மேல் ஒவ்வோர் ஆண்மகனும் ஆண்டுக்கு ஒருமுறையாகிலும், குறிப்பாக, எருசலேம் திருவிழாவின்போது, கோவிலுக்குக் கட்டாயம் செல்லவேண்டும். இதுவரை குழந்தையாக இருந்த அச்சிறுவன், இனி தனித்து முடிவுகள் எடுக்கும் தகுதிபெற்ற ஓர் ஆண்மகன் என்பதை உறுதி செய்யும் வகையில் இப்பழக்கம் அமைந்தது.

வளர் இளம் பருவத்தில் அடியெடுத்துவைத்த இயேசு, தன் சுதந்திரத்தை நிலைநாட்ட செய்யும் முதல் செயல் என்ன? அப்பா, அம்மாவிடம் சொல்லாமல், கோவிலில் நடந்த மறைநூல் விவாதம் ஒன்றில் அவர் கலந்துகொண்டார். நல்ல விஷயம் தானே! இதை ஏன் ஒரு பிரச்சனையாகப் பார்க்க வேண்டும்? என்று நாம் கேள்வியை எழுப்பலாம்.

கழுவித் துடைத்த ஒரு திருப்பொருளாக திருக்குடும்பத்தை நாம் பார்த்து பழகிவிட்டதால், இப்படிப்பட்டக் கேள்வியை எழுப்புகிறோம். ஆனால், பிள்ளையைத் தொலைத்துவிட்ட பெற்றோரின் நிலையில் இருந்து இதைப் பார்த்தால், அது எவ்வளவு பெரிய பிரச்சனை என்பதை நாம் உணரலாம். மகனைக் காணாமல் பதைபதைத்துத் தேடிவரும் மரியாவும் யோசேப்பும் மூன்றாம் நாள் இயேசுவைக் கோவிலில் சந்திக்கின்றனர். அச்சந்திப்பில் நாம் சில பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

தங்கள் மகன் மறைநூல் அறிஞர்கள் மத்தியில் அமர்ந்து, அவர்களுக்கு இணையாக, சிலவேளைகளில் அவர்களுக்கு மேலாக, விவாதங்கள் செய்ததைக் கண்டு, அவரது பெற்றோர் வியந்தனர், மகிழ்ந்தனர்... அதே சமயம் பயந்தனர். வயதுக்கு மீறிய அறிவுடன், திறமையுடன் செயல்படும் குழந்தைகளால் பெற்றோருக்குப் பெருமையும் உண்டு... சவால்களும் உண்டு. மரியா தன் மகனைப் பார்த்து, தன் ஆதங்கத்தை எடுத்துக் கூறுகிறார். இயேசுவோ அவர் அம்மா சொல்வதைப் பெரிதுபடுத்தாமல், தான் இனி தனித்து முடிவெடுக்கும் நிலைக்கு வந்துவிட்டதை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார்.

இயேசு மரியாவுக்குச் சொன்ன பதில் அந்த அன்னையின் மனதைப் புண்படுத்தியிருக்க வேண்டும். அதுவும், மற்றவருக்கு முன்னால் அப்படிப் பேசியதால், அந்த அன்னையின் மனது இன்னும் அதிகம் வலித்திருக்கும். மகன் சொல்வதில் என்னதான் நியாயம் இருந்தாலும், வலி வலிதானே! அந்த வேதனையில் அவர் கோபப்பட்டு மேலும் எதாவது சொல்லியிருந்தால், பிரச்சனை பெரிதாகி இருக்கும்.

குடும்ப உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள பொது இடங்கள் நல்லதல்ல என்ற ஒரு சின்ன பாடத்தையாவது, அன்னை மரியாவிடம் நாம் கற்றுக்கொள்ளலாமே. மரியா இயேசுவின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளவில்லை, இருந்தாலும் அவற்றைத் தன் மனதில் ஒரு கருவூலமாகப் பூட்டி வைத்துக்கொண்டு கிளம்பினார். இயேசுவும் அவர்களோடு சென்றார். தான் தனித்து முடிவெடுக்க முடியும் என்பதை, பெற்றோருக்கு உணர்த்திய இயேசு, அடுத்த 18 ஆண்டுகள் செய்தது என்ன? “பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார்… இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்” (லூக்கா 2: 51-52) என்று இன்றைய நற்செய்தி நிறைவடைகிறது.

இறுதியாக, ஒரு சில எண்ணங்கள்... திருவிழாவுக்குச் சென்றவேளையில், இயேசு காணாமல் போய்விடும் சம்பவம், இன்றைய நிகழ்வுகளை நம் நினைவுக்குக் கொண்டுவருகிறது. திருவிழாக் கூட்டங்களில் குழந்தைகளைத் தொலைத்துவிட்டு, தவிக்கும் பெற்றோரை... பெற்றோரை இழந்து, தனித்து விடப்படும் குழந்தைகளை... நினைத்துப் பார்ப்போம். இவர்களை மீண்டும் இறைவன் ஒன்றிணைக்க வேண்டும் என்று மன்றாடுவோம். இவ்விதம் காணாமல்போகும் குழந்தைகளைக் கடத்திச்சென்று, பிச்சை எடுப்பதற்கும், இன்னும் பல தவறான வழிகளுக்கும் இவர்களைப் பயன்படுத்தும் மனசாட்சியற்ற மனிதர்களை நினைத்துப் பார்ப்போம். இவர்களுக்காகவும் நாம் செபிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

நாசரேத்து என்ற சிற்றூரில், கிராமத்தில் வளர்ந்து வந்த இயேசு, எருசலேம் நகரத்திற்குச் சென்று காணாமல் போகிறார் என்பதும் ஒரு சில சிந்தனைகளை, செபங்களைத் தூண்டுகிறது. கிராமங்களில், சிறு ஊர்களில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு மேற்படிப்பிற்கெனச் சென்று, பல வழிகளில் காணாமல் போய்விடும் இளையோரை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். நகரத்திற்குத் தங்கள் மகனையோ, மகளையோ அனுப்பிவிட்டு, பின்னர் அவர்களை நகரம் என்ற காட்டில் தொலைத்துவிட்டுத் தவிக்கும் பெற்றோரையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். பல வழிகளில் தங்களையேத் தொலைத்துவிட்டு தவிக்கும் இளையோரும் பெற்றோரும் தங்கள் குடும்ப உறவுகளில் மீண்டும் தங்களையேக் கண்டுகொள்ள வேண்டும் என திருக்குடும்பத்தின் இயேசு, மரியா, யோசேப்பு வழியாக இறைவனை இறைஞ்சுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.