2015-12-25 13:47:00

திருத்தந்தையின் 'ஊருக்கும் உலகுக்கும்' என்ற ஊர்பி எத் ஓர்பி


அன்பு சகோதர சகோதரிகளே, கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.

கிறிஸ்து நமக்காகப் பிறந்துள்ளார், மீட்பின் இந்நாளில் நாம் பெருமகிழ்ச்சியடைவோம்.

இந்நாளின் அருளைப் பெறுவதற்கு நம் இதயங்களைத் திறப்போம். கிறிஸ்துதான் அந்த அருள். இதுவே சுடர்விடும் நாள். இந்நாள்தான் மனிதக் குலத்தின் தொடுவானத்தில் புலர்ந்துள்ளது. இது இரக்கத்தின் நாள், இதில் நம் தந்தையாம் இறைவன், தன் உன்னத பாசத்தை உலகம் முழுமைக்கும் வெளிப்படுத்தியுள்ளார். இது ஒளியின் நாள், இது, அச்சம், ஏக்கம் எனும் இருளை விரட்டியடிக்கிறது.

இது அமைதியின் நாள், இது, சந்திப்பிற்கும், உரையாடலுக்கும், ஒப்புரவுக்கும் வழி அமைக்கிறது. இது மகிழ்வின் நாள், இது, ஏழைகளுக்கும் தாழ்நிலையில் உள்ளோருக்கும், அனைத்து மக்களுக்கும் உன்னத மகிழ்வைத் தருகிறது (லூக். 2:10)

இந்நாளில், மீட்பராம் இயேசு கன்னிமரியிடம் பிறந்தார். கடவுள் நமக்கு வழங்கிய அடையாளத்தைக் கண்டுகொள்வதற்கு குடில் நமக்கு உதவுகிறது. குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்(லூக். 2:12).

பெத்லகேமின் இடையர்கள்போல் நாமும், இந்த அடையாளத்தைக் காணப் புறப்படுவோம். இந்நிகழ்வு, ஒவ்வோர் ஆண்டும் திருஅவையில் புதுப்பிக்கப்படும் ஒன்று. கிறிஸ்மஸ் என்பது ஒவ்வொரு குடும்பத்திலும், பங்குத்தளத்திலும், சமூகத்திலும் புதுப்பிக்கப்படும் ஒன்று. இதன்வழியாக, சமூகமானது, இயேசுகிறிஸ்துவில் மனுவுருவான இறைவனின் அன்பைப் பெறுகிறது. அன்னை மரியாவைப்போல், திருஅவையும் அனவருக்கும் இந்த இறை அடையாளத்தைக் காட்டுகிறது. மரியா தன் உதரத்தில் தாங்கி பிறப்பளித்த அந்தக் குழந்தையே இந்த அடையாளம். இருப்பினும் இந்தக் குழந்தையே உன்னதரின் மகன், அவரே தூய ஆவியானவர் (மத்.1.:20). அவரே உண்மையில் மீட்பர், ஏனெனில் உலகின் பாவங்களை, தோள்களில் சுமக்கும் இறை ஆட்டுக்குட்டி அவரே (யோவான் 1:29). ஆட்டிடையர்களுடன் இணைந்து, அந்த ஆட்டுக்குட்டியை வணங்குவோம். மனுவுருவான இறைவனுனின் நன்மைத்தனத்தை வழிபடுவோம். பாவங்களுக்காக வருந்தும் நம் கண்ணீர், நம் கண்களை நிறைத்து, நம் இதயங்களைக் கழுவட்டும்.

அவர் ஒருவரே, அவர் மட்டுமே, நம்மை மீட்க முடியும். கடவுளின் கருணை மட்டுமே மனித குலத்தை அதன் அனைத்து வகையான பாவங்களிலிருந்து விடுவிக்க இயலும். சில வேளைகளில், நம் சுயநலங்களால், பெரும் தீமை நம்மிடையே வந்து பிறக்கின்றது. கடவுளின் அருள், இதயங்களை மாற்றம் பெறவைத்து, மனித குலம் தன்னால் தீர்வு காணமுடியாத நிலைகளிலிருந்து வெளிவர உதவுகின்றது.

கடவுள் எங்கு பிறக்கிறாரோ, அங்கே நம்பிக்கையும் பிறக்கிறது. கடவுள் பிறக்கும் இடத்தில் அமைதியும் பிறக்கிறது. அமைதி பிறக்கும் இடத்தில், பகைமைக்கும் போருக்கும் இடமில்லை. ஆனால், இறைமகன் எந்த இடத்தில் பிறந்தாரோ, அங்கு இன்று பதட்ட நிலைகளும் வன்முறைகளும் தொடர்கின்றன, அமைதி எனும் கொடை இன்னும் கிட்டாத ஒன்றாகவும் கட்டியெழுப்பப்பட வேண்டிய ஒன்றாகவும் அங்கு உள்ளது. இஸ்ராயேலர்களும் பாலஸ்தீனியர்களும் நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் துவக்கி, அமைதி உடன்பாட்டிற்கு வழி வகுப்பார்களாக. இதன் வழியாக, இவ்விரு மக்களிடையே இணக்கம் ஏற்படுவதுடன், மோதல்களைக் கைவிட்டு வாழ்வார்களாக.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தில் கொண்டுவரப்பட்டுள்ள உடன்பாடு, சிரியாவின் ஆயுத மோதல்களையும், அப்பகுதியில் துன்புறும் மக்களின் மிகப்பெரும் கொடும் அவலங்களையும் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என இறைவனை நோக்கி வேண்டுவோம். இதேப்போன்று, லிபியா குறித்து காணப்பட்டுள்ள உடன்பாடும் அனைவராலும் ஆதரிக்கப்படவேண்டும். இதன் வழி, அந்நாட்டு மக்களை பாதிக்கும் பிரிவுகளையும், வன்முறைகளையும் வெற்றி கொள்ளமுடியும். இந்நாடுகளில் நடக்கும் கொடுஞ்செயல்களை முடிவுக்குக் கொணர, அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து உதவுவதாக. இதைப்போன்று, ஈராக், லிபியா, ஏமன் மற்றும் சஹாராவை அடுத்த ஆப்ரிக்க நாடுகளின் எண்ணற்ற மக்கள் பலியாகியுள்ளனர், மற்றும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, இங்கு வரலாற்று, பண்பாட்டு பாரம்பரியச் சின்னங்களும் அழிவிலிருந்துத் தப்பவில்லை. பயங்கரவாதத்தின் கொடும் செயல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நோக்கி என் எண்ணங்கள் திரும்புகின்றன. குறிப்பாக, எகிப்தின் பெய்ரூட் விமான தளத்திலும், பாரிஸ், பமாகோ, துனிசியாவிலும் இடம்பெற்ற அண்மைப் படுகொலைகள் நோக்கித் திரும்புகின்றன.

தங்கள் விசுவாசத்திற்காக உலகின் பல பகுதிகளில் சித்ரவதைகளுக்கு உள்ளாகும் நம் சகோதர சகோதரிகளுக்கு, குழந்தை இயேசு, ஆறுதலையும் பலத்தையும் அருள்வாராக.

காங்கோ ஜனநாயக குடியரசு, புருண்டி மற்றும் தென் சூடானில், அமைதியும் இணக்கமும் ஏற்பட வேண்டும் எனவும் செபிப்போம். இந்நாடுகளில், புரிந்துகொள்ளுதல் மற்றும் ஒப்புரவின் உண்மையான உணர்வுடன் தூண்டப்பட்ட சமூகங்களைக் கட்டியெழுப்ப உரையாடல் வழியான பொது அர்ப்பணம் பலப்படுத்தப்பட வேண்டும் என வேண்டுவோம்.

இந்த கிறிஸ்மஸ், உக்ரைன் நாட்டிற்கு உண்மையான அமைதியைக் கொணர்வதாக. மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதலைக் கொணர்வதாக. முழு நாட்டிலும் இணக்க வாழ்வை கொணரும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்களை செயல்படுத்தும் ஆர்வத்தைத் தூண்டுவதாக.

இந்நாளின் மகிழ்வு, கொலம்பிய மக்களின் முயற்சிகளை ஒளிர்விப்பதாக. இதன் வழியாக, அம்மக்கள் நம்பிக்கையால் தூண்டப்பட்டு, அவர்கள் விரும்பும் அமைதியை நோக்கி உழைப்பதற்கான அர்ப்பணத்தில் தொடர்வார்களாக.

கடவுள் பிறக்கும் இடத்தில் நம்பிக்கையும் பிறக்கிறது. நம்பிக்கை பிறக்குமிடத்தில், மக்கள் தங்கள் மாண்பை மீண்டும் பெற்றுக் கொள்கின்றனர். இருப்பினும், இந்நாட்களிலும் எண்ணற்ற ஆண்களும் பெண்களும், தங்கள் மனித மாண்பை இழந்துள்ளனர். இயேசுவைப்போல் இவர்களும் குளிராலும், ஏழ்மையாலும், ஒதுக்கப்படுதலாலும் துன்புறுகின்றனர். இவ்வாறு துன்புறுவோர், நம் அருகாமையை இந்நாளில் உணரட்டும். குறிப்பாக, சிறார் இராணுவ வீரர்கள், வன்முறைகளை அனுபவிக்கும் பெண்கள், மனிதர்கள் சந்தைப் பொருள்களாக கடத்தப்படுவதாலும், போதைப்பொருள் வியாபாரத்தாலும் பாதிக்கப்படுவோர் நம் அருகாமையை உணர்வார்களாக.

மிகவும் ஏழ்மை நிலையாலும், போராலும், நாடுகளை விட்டு வெளியேறி, எப்போதும் மனிதாபிமானமற்ற நிலைகளில் பயணம் செய்து, வாழ்விற்கு ஆபத்தான நிலைகளில் தள்ளப்பட்டிருக்கும் மக்களுக்கு, நம் ஊக்கத்தையும் ஆதரவையும் அளிப்போம். புலம் பெயர்ந்து வாழும் எண்ணற்ற மக்களை வரவேற்று, தாராளமனதுடன் உதவிகளை வழங்குவதுடன், அவர்கள், தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் மாண்புடன் கூடிய வருங்காலத்தைக் கட்டியெழுப்ப உதவி வழங்கி, அவர்களையும் நாட்டிற்குள் ஓர் அங்கமாக ஏற்கும் தனியார்களுக்கும் நாடுகளுக்கும் இறைவன் உரிய வெகுமதியை அளிப்பாராக.

வேலையின்றி துன்புறும் மக்களில் நம்பிக்கையை இந்த திருவிழா நாளில் இறைவன் புதுப்பிப்பாராக. அரசியல், மற்றும் பொருளாதார வாழ்வில் பொறுப்பிலிருப்போர், பொது நலனுக்காக உழைத்தல், மற்றும் ஒவ்வொரு மனிதரின் மாண்பை பாதுகாத்தல் போன்றவற்றிற்காக உழைக்கும் தங்கள் அர்ப்பணத்தில் தொடர்ந்து செயல்பட இறைவன் உதவுவாராக.

இறைவன் பிறக்குமிடத்தில் இரக்கம் பூத்துக் குலுங்குகிறது. இரக்கமே, இறைவன் நமக்கு வழங்கும் விலைமதிப்பற்ற கொடை. அதிலும் குறிப்பாக, நம் ஒவ்வொருவருக்கும், வானகத் தந்தையின் பாசம் நிறை  அன்பை கண்டுணர அழைப்புப் பெற்றுள்ள இந்த யூபிலி ஆண்டில் இது முக்கியமானது. தீமைகளை வெற்றிகொள்வதுடன், காயங்களைக் குணப்படுத்தும் இறைவனின் இரக்கம் நிறை அன்பை அனுபவிக்க சிறைக் கைதிகளை இறைவன் தூண்டுவாராக.

ஆகவே நம் மீட்பின் இந்நாளில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து குதூகலிப்போம். குடிலைக் குறித்து தியானிக்கும் வேளையில், இயேசுவின் திறந்த கரங்களில் நம் பார்வையைச் செலுத்துவோம், அக்கரங்கள் நமக்கு இறைவனின் இரக்கம் நிறைந்த அரவணைப்பை காண்பிக்கின்றன. அதேவேளை, குழந்தை இயேசு நம்மை நோக்கி, 'என் சகோதரர்கள் மற்றும் உடனிருப்போரின் சார்பாக நான் கூறுகிறேன், : சமாதானம் உங்களோடு இருப்பதாக' என்று மெல்லிய குரலில் கூறுவது கேட்கிறது.

இவ்வாறு, தன் ஊர்பி எத் ஓர்பி செய்தியை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வாழ்த்துக்களையும் வழங்கினார். பின்னர், 'ஊருக்கும் உலகுக்கும்' என்ற ஊர்பி எத் ஓர்பி சிறப்பு ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.