2015-12-23 16:49:00

மியான்மார் கர்தினால், சார்ல்ஸ் போ அவர்களின் கிறிஸ்மஸ் செய்தி


டிச.23,2015. சமுதாயத்தின் விளிம்பில் வாழ்வோரைத் தேடிச் செல்லுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் விடுத்துள்ள அழைப்பை, மியான்மார் கத்தோலிக்கர்கள் கடைப்பிடித்து வருகின்றனர் என்று மியான்மார் கர்தினால், சார்ல்ஸ் மாவுங் போ (Charles Maung Bo) அவர்கள் தன் கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார்.

நவம்பர் 8ம் தேதி நடைபெற்ற தேர்தலில், மியான்மார் மக்கள் மக்களாட்சிக்கு அடித்தளமிட்டுள்ளனர் என்று கூறியுள்ள கர்தினால் போ அவர்கள், தங்கள் நாடு செல்லவேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளதென்றும், இதில், பழிக்குப் பழி என்ற உணர்வுக்கு இடமில்லை என்றும் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

தச்சுவேலை செய்த எளிய மனிதரான யோசேப்புவின் குடும்பத்தில், மாடடையும் ஒரு குடிலில் பிறந்த இயேசு என்ற கனவு, இவ்வுலகையே மாற்றியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் போ அவர்களின் செய்தி, விசுவாசத்தால் மலைகளையும் பெயர்க்க முடியும் என்று கூறியுள்ளது.

கர்தினால் போ  அவர்கள் அனுப்பியுள்ள கிறிஸ்மஸ் செய்தியில், இராணுவத்தினர், அரசு அதிகாரிகள், எதிர் கட்சித் தலைவர்கள், அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதாக, ஆசிய செய்தி கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.