2015-12-23 15:39:00

மலாலாக்கள் ஒன்றிணைந்து சிறுமி கல்வியை ஊக்குவிக்க உறுதி


டிச.23,2015. சிறுமிகளின் கல்விக்காக உழைத்துவரும் பாகிஸ்தான் நாட்டு மலாலாவும், சிரியா நாட்டு மலாலாவும் ஒன்றிணைந்து உழைப்பதற்குத் தீர்மானித்துள்ளனர் என்று பிபிசி செய்தி நிறுவனம் கூறியது.

சிரியா நாட்டு மலாலா என்றழைக்கப்படும், அந்நாட்டு 17 வயது நிரம்பிய சிறுமி Muzoon Almellehan அவர்கள், ஜோர்டன் எல்லையிலுள்ள சிரியா நாட்டு புலம்பெயர்ந்தவர் முகாம்களில் ஒவ்வொரு குடிசையாகச் சென்று தாய்மாரிடம் தங்களின் பெண் பிள்ளைகளுக்கு கல்வியளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வந்தார்.

அம்முகாம்களிலிருந்து பிரித்தானியாவுக்கு முதலில் வந்துள்ள Muzoon அவர்களின் குடும்பத்தினரும், பிரித்தானியாவில் வாழும் பாகிஸ்தான் பெண் கல்வி ஆர்வலர் Malala Yousafzai அவர்களின் குடும்பத்தினரும் முதன்முறையாக இப்புதனன்று Newcastle City நூலகத்தில் சந்தித்துக்கொண்டனர்.

இரு மலாலாக்களின் தந்தையரும், அன்னையரும் பேசிக்கொண்டிருந்தவேளை, இரு சிறுமி மலாலாக்களும் சேர்ந்து தங்களின் எதிர்கால பெண்கல்வித் திட்டம் குறித்து கலந்து பேசினர்.

இலண்டனில் வருகிற பிப்ரவரியில் நடக்கும் பெரிய கருத்தரங்கில், சிரியா நாட்டுச் சிறுமிகளின் கல்வி குறித்த அடுத்த திட்டத்தை Muzoon மற்றும் மலாலாவும் ஆரம்பிக்கவுள்ளனர்.

பாரம்பரிய முஸ்லிம் குடும்பங்களில் பிறந்த இவ்விரு சிறுமிகளின் ஆசிரியர் தந்தையர், தங்கள் பிள்ளைகளில் கல்வி மீது அன்பை உருவாக்கியுள்ளனர்.  

பாகிஸ்தானில் சிறுமிகளின் கல்விக்காக உழைத்து வந்த சிறுமி மலாலா யூசூப்சாயி அவர்கள் தலிபான்களால் தாக்கப்பட்டார். தற்போது பிரித்தானியாவில் குடும்பத்தோடு வாழும் 18 வயது நிரம்பிய மலாலா, 2014ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதையும் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஆதாரம் : BBC/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.