2015-12-23 16:30:00

மறுவாழ்வு பெறும் இளையோர் மனங்களில் மீண்டும் இயேசு பிறப்பு


டிச.23,2015. போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து மறுவாழ்வு பெற்றுவரும் இளையோரின் மனங்களில் குழந்தை இயேசு மீண்டும் பிறக்க வருகிறார் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இச்செவ்வாயன்று வழங்கிய ஒரு மறையுரையில் கூறினார்.

போதைப்பொருள் பயன்பாடு, புலம்பெயர்தல் ஆகிய துன்பங்களில் சிக்குண்ட இளையோருக்கு மறுவாழ்வளிக்கும் நோக்கத்தோடு, உரோம் நகரில் இயங்கிவரும் CeIS என்ற மையத்தில், இச்செவ்வாய் மாலை கிறிஸ்மஸ் விழா திருப்பலியாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், இவ்வாறு கூறினார்.

பெத்லகேமில் கிறிஸ்து ஆயிரம் முறை பிறந்தாலும், அவர் நம் உள்ளங்களில் பிறக்கும்வரை அது கிறிஸ்மஸ் விழாவாக மாறாது என்று ஜெர்மானிய ஆழ்நிலை ஞானி, Angelus Silesius அவர்கள் கூறிய வார்த்தைகளை தன் மறையுரையில் சுட்டிக் காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், தவறுகளை உணர்ந்து, திருந்தி வாழும் உள்ளங்களில் கிறிஸ்துவின் பிறப்பு இன்னும் பொருள் உள்ளதாக மாறுகிறது என்று குறிப்பிட்டார்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் நாம் கொண்டாடும் இந்த கிறிஸ்மஸ் விழாவின் வழியாக,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், CeIS மையத்தில் உள்ள அனைத்து இளையோருடனும் மனத்தால் ஒன்றித்துள்ளார் என்று கர்தினால் பரோலின் அவர்கள் தன் மறையுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

இளையோரின் மறுவாழ்வுக்கென பணியாற்றிவரும் CeIS மையத்தின் கிறிஸ்மஸ் விழாவில், புலம் பெயர்ந்து வாழும் பல இளையோர் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.