2015-12-23 16:15:00

திருத்தந்தை பிரான்சிஸ் - Charlemagne விருதுக்குத் தெரிவு


டிச.23,2015. ஐரோப்பிய கண்டத்தில் வழங்கப்படும் புகழ்பெற்ற விருதுகளில் ஒன்றான, Charlemagne விருதினை, 2016ம் ஆண்டு பெறுவதற்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று, இப்புதனன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அமைதி, கூட்டுறவு, ஒருங்கிணைப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபடுவோரும், பொதுவாக, உலக அமைதிக்கும், மனித சமுதாய முன்னேற்றத்திற்கும் திறம்பட உழைத்தவர்களும் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

மனதைத் தளரச் செய்யும் பல்வேறு நிகழ்வுகளால் உடைந்துபோயிருக்கும் ஐரோப்பிய சமுதாயத்தைத் தட்டியெழுப்பி, அச்சமுதாயத்திற்கு ஊக்கமும், நம்பிக்கையும் அளிக்கும் ஒரு மனசாட்சியின் குரலாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செயலாற்றியுள்ளார் என்று இவ்விருதுக் குழுவின் சார்பாக, இப்புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய Aachen நகர மேயர், Marcel Philipp அவர்கள் கூறினார்.

சந்திக்கும் கலாச்சாரத்தை வளர்க்கவும், உரையாடல் முயற்சிகளை மேற்கொள்ளவும் உலக சமுதாயத்தை ஊக்குவித்து வருபவர், திருத்தந்தை பிரான்சிஸ் என்பதை, மேயர் Philipp அவர்கள் எடுத்துரைத்தார்.

புனித உரோமைய பேரரசை உருவாக்கிய Charlemagne அல்லது, பெரிய சார்லஸ் என்ற பேரரசரின் பெயரால் உருவாக்கப்பட்டு,1950ம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருது, 2004ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

பொதுவாக, கிறிஸ்துவின் விண்ணேற்றப் பெருவிழாவன்று வழங்கப்படும் இவ்விருது,  வரும் ஆண்டு, உரோம் நகருக்குக் கொணரப்பட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நாளில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.