2015-12-22 14:50:00

வியட்நாமில் முதல் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம்


டிச.22,2015. வியட்நாம் கம்யூனிச நாட்டில் முதல் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் வருகிற மே மாதத்திற்குள் திறக்கப்படும் என்று அந்நாட்டுப் பேராயர் ஒருவர் கூறினார்.

Ho Chi Minh நகரில் திறக்கப்படவுள்ள முதல் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் பற்றி UCA செய்தி நிறுவனத்திடம் பேசிய அந்நகர் பேராயர் Paul Bui Van Doc அவர்கள், வத்திக்கானுக்கும், வியட்நாம் அரசுக்கும் இடையே உறவுகள் மேம்பட்டு வருகின்றன என்றும், கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் திறக்கப்படுவதற்கு கம்யூனிச அரசு அனுமதி வழங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.

வியட்நாம் ஆயர்கள் பேரவை தலைமையகத்திலுள்ள சில அறைகளில் இவ்வாண்டில் ஏறக்குறைய நூறு மாணவர்கள், மெய்யியலும், இறையியலும் கற்கின்றனர், எதிர்காலத்தில் இவ்வெண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டக்கூடும் என்றும் கூறினார் பேராயர் Paul Bui Van Doc.

வியட்நாமில் 1975ம் ஆண்டுக்கு முன்னர், கத்தோலிக்கத் திருஅவை பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை நடத்தியது. ஆனால், அந்நாட்டில் கம்யூனிசம் ஆட்சிக்கு வந்த பின்னர் கல்வித்துறையில் கத்தோலிக்கத் திருஅவை சிறிதளவு சுதந்திரத்தையே கொண்டுள்ளது.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.