2015-12-21 16:00:00

வாரம் ஓர் அலசல் – கிறிஸ்மஸ் இதயம்


டிச.21,2015. டிசம்பர் 25, வருகிற வெள்ளிக்கிழமை, கிறிஸ்துமஸ் பெருவிழா நாளன்று வானில் உதிக்கவுள்ள முழுநிலவு மிகவும் அரிதானது. இந்த முழுநிலவு பெரிதாகவும், மிகுந்த ஒளியுடனும் இருக்கும். 1977ம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதியன்று இத்தகைய முழு நிலவு தோன்றவுள்ளது. இவ்வாறாக டிசம்பர் 25ல் தோன்றும் முழுநிலவை ஃபுல் கோல்ட் மூன் (Full Cold Moon) என்று அழைப்பது வழக்கம். குளிர்காலத்தின் துவக்கத்தில் இந்த நிலவு தோன்றுவதே அதற்குக் காரணம். இதன் பின்னர் 2034ம் ஆண்டில்தான் மீண்டும் டிசம்பர் 25ம் தேதியன்று முழு நிலவு தோன்றும் என அமெரிக்க ஐக்கிய நாட்டின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அன்பு நெஞ்சங்களே, கடவுள் வியப்புக்களின் ஆண்டவர். நம் ஒவ்வொருவர் வாழ்விலும், எதிர்பாராத நேரங்களில், எதிர்பாராத நிகழ்வுகளை நிகழ்த்தி நம்மை வியப்புகளில் ஆழ்த்துபவர் நம் கடவுள். இன்பமோ, துன்பமோ மனிதரின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட, நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பதை நாம் கண்டும், அனுபவித்தும் வருகிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக, கடவுள் புனித பூமியின் பெத்லகேமில் மனித உரு எடுத்த அந்த வரலாற்று நாளிலும் வியப்புகள் நடந்தேறின. இரவெல்லாம் தங்கள் கிடைகளுக்கு காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்கள் இயேசு பிறந்த செய்தியை முதலில் அறிந்தனர். வானில் தோன்றிய அற்புத விண்மீனால் வழிநடத்தப்பட்டு மூன்று கீழ்த்திசை ஞானிகள் பெத்லகேம் நோக்கி வந்து குழந்தை இயேசுவைத் தரிசித்துச் சென்றனர். இப்படி இயேசு பிறந்த நேரமுதல் இன்றுவரை வியப்புகள் தொடர்கின்றன. இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் வியப்பின் இடங்கள் பற்றிக் கூறினார்.

"கிறிஸ்மஸை அர்த்தமுள்ள வகையில் சிறப்பிக்க வேண்டுமெனில் வியப்பின் இடங்களில் குடியிருக்க நாம் அழைக்கப்படுகிறோம். நம் அன்றாட வாழ்வில் இந்த  வியப்பின் இடங்கள் எவை? முதல் இடம், நம்முடன் வாழும் மனிதர்கள். ஏனெனில் இயேசுவின் பிறப்பிலிருந்து, ஒவ்வொரு மனிதரின் முகமும் இறைமகனின் சாயலைத் தாங்கியுள்ளது. இந்தச் சாயலை குறிப்பாக ஏழைகளின் முகத்தில் காண்கிறோம். காரணம், கடவுள் இந்த உலகில் ஏழையாக நுழைந்தார். ஏழைகள் தம்மை முதலில் பார்க்க அனுமதித்தார். இரண்டாவது வியப்பின் இடம் வரலாறு. அதை விசுவாசக் கண்கொண்டு நோக்கினால் இந்த உண்மை புரியும். பல நேரங்களில் இதைச் சரியாகவே புரிந்துகொள்கிறோம். ஆனால், இந்த உலகம், பொருளாதாரச் சந்தையால் தீர்மானிக்கப்பட்டு, நிதி அமைப்பால் கட்டுப்படுத்தப்பட்டு, அதிகார வர்க்கத்தால் ஆதிக்கம் செலுத்தப்படும்போது வரலாறு பற்றிய நமது பார்வை பின்னோக்கிச் செல்கிறது. ஆனால் கிறிஸ்மஸ் கடவுள் இவை அனைத்தையும் புரட்டிப் போடுகிறார். எவ்வாறெனில், அன்னை மரியா பாடியதுபோன்று, வலியவர் அரியணையினின்று இறக்கப்படுவர், எளியோர் உயர்த்தப்படுவர், பசித்திருப்பவர் பல நலன்களால் நிரப்பப்படுவர், செல்வர் வெறுங்கையராய் அனுப்பப்படுவர். மூன்றாவது வியப்பின் இடம் திருஅவை. இதை ஒரு சமய நிறுவனமாக நோக்காமல், ஒரு தாயாக நோக்க வேண்டும்....

அன்பு நெஞ்சங்களே, செல்வர் வெறுங்கையராய் நின்றதையும், பசித்தோர் நலன்களால் நிரப்பப்பட்டதையும் இந்த டிசம்பரில்கூட நாம் கண்டோம். எதிர்பார்த்திராத அளவுக்குப் பேரிடர்கள் நடக்கும்போது, பணம் படைத்தவர்கள், அனைத்தையும் இழந்து வெறுங்கையராய் ஏழைகளோடு சமபந்தியில் அமர்கின்றனர். ஏழைகளுக்கு வழங்கப்படும் ஆடைகளையே அவர்களும் உடுத்துகின்றனர். கிறிஸ்மஸ் கடவுள், வியப்பின் கடவுள். கிறிஸ்மஸ் காலம் வியப்புக்களின் காலம். இந்த உலகையே ஆள நினைத்த பேரரசர் அலெக்சாண்டர் தனது மரண நேரத்தில் தனது தளபதிகளிடம் தெரிவித்த மூன்று கடைசி ஆசைகள் என்னவென்று நமக்குத் தெரியும். பேரரசர் அலெக்சாண்டர் அவர்கள், தனது சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்கள்தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதை முதல் விருப்பமாகத் தெரிவித்தார். ஏனென்றால்.. தலைசிறந்த மருத்துவர்களால்கூட என்னை நோயிலிருந்து காப்பாற்ற முடியாது, சாவைத் தடுக்க முடியாது என்பதை உலகத்திற்கு தெரியப்படுத்துவதற்காகவே... என்று சொன்னார். இரண்டாவது விருப்பமாக, நான் இதுவரை சேர்த்துவைத்த பணம், தங்கம், விலையுயர்ந்த கற்கள் போன்றவைகளை என்னுடைய இறுதி ஊர்வலத்தின் பாதையில் தூவிக்கொண்டு செல்ல வேண்டும். ஏனென்றால்.. நான் இந்த பூமியில் கைப்பற்றிய பொருட்கள் பூமிக்கே சொந்தமானவை என்பதை தெரியப்படுத்துவதற்காக... என்று சொன்னார் பேரரசர் அலெக்ஸாண்டர். மூன்றாவது விருப்பமாக, என் கைகளைச் சவப்பெட்டியின் வெளியில் தொங்கிக்கொண்டு வரும்படி செய்ய வேண்டும். ஏனென்றால்.. எனது கைகள் காற்றில் அசையும்போது, வெறும் கையுடன் வந்த நான் வெறும் கையுடன் போவதை மக்கள் உணர்ந்து கொள்வார்கள்... என்று சொல்லி, தன்னை வியப்புடன் நோக்கிய தனது தளபதிகளுக்குத் தெளிவுபடுத்தினார் பேரரசர் அலெக்ஸாண்டர். கிறிஸ்மஸ் கடவுள் நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பல வியப்புக்களை வழங்கி, வாழ்க்கை பற்றிய பல உண்மைகளைத் தெளிவுபடுத்துகிறார். கிறிஸ்மஸ் இதயம், கொடுக்கும் இதயம். தன்னைவிட மற்றவரை முதலில் நினைக்கும் பரந்த இதயம் கொண்டது அது. இயேசுவின் பிறப்பு, வரலாறுகள் அனைத்திலும் மிக முக்கியத்துவம் பெற்றது. ஏனெனில் இயேசுவின் பிறப்பு, நோயுற்ற உலகில், அன்பு என்ற குணமளிக்கும் மருந்தைப் பொழிந்தது. இந்தக் குணமளிக்கும் மருந்து ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக எல்லாவிதமான இதயங்களிலும் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது என்று சொல்லியுள்ளார் George Matthew Adams(The Christmas Heart). சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்க்கு, வயது வரம்பின்றி சிறார் முதல் வயதானவர்கள் வரை உதவி செய்துள்ளதை நாம் வாசிக்கும்போது, அடடடா... நானும்கூட இப்படியெல்லாம் செய்திருக்கலாமே என்று நேயர்களே, உங்களில் எத்தனையோ பேர் நினைத்திருக்கலாம்.

சென்னை முத்தமிழ் நகரைச் சேர்ந்த 5ம் வகுப்பு மாணவி யுவஸ்ரீஜாவும், ஒன்றாம் வகுப்பு படிக்கும் அவரது தம்பி நிகிலும் சேர்ந்து தாங்கள் தினமும் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை முதலமைச்சர் வெள்ள நிவாரணத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். சென்னை மக்கள் தண்ணீரில் தத்தளித்த டிசம்பர் 2ம் தேதிதான் யுவஸ்ரீஜாவுக்குப் பிறந்தநாள். பிறந்த நாளைக் கொண்டாட மனமில்லாமல் மக்களின் துயரத்தை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு இருந்தார் யுவஸ்ரீஜா. பிறகு தானும், தம்பியும் சேர்ந்து சேமித்து வைத்த உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தை எண்ணியபோது அதில் 683.50 ரூபாய் இருந்துள்ளது. அதை எடுத்துக் கொண்டு தனது அப்பா சோமசுந்தரம் அவர்களிடம் சென்ற யுவஸ்ரீஜா, 'இதை வெள்ள நிவாரணத்துக்காக கொடுங்கள்' என்று கூறியுள்ளார். இதைக்கேட்டு வியப்படைந்த சோமசுந்தரம் அவர்கள், அந்தப் பணத்தை காசோலையாக மாற்றி முதலமைச்சரின் வெள்ள நிவாரணத்துக்கு டிசம்பர் 16ம் தேதி அனுப்பி வைத்துள்ளார். அதோடு முதலமைச்சருக்கு யுவஸ்ரீஜாவும், நிகிலும் கடிதம் ஒன்றும் எழுதியுள்ளனர்.

கிறிஸ்மஸ் இதயம், தன்னைவிட மற்றவரை முதலில் நினைக்கும் பரந்த இதயம். அது கொடுக்கும் இதயம். வியப்புகளின் கடவுள் கிறிஸ்மஸ் இதயங்களில் வியப்புக்களை நிகழ்த்தி வருகிறார். நேயர்களே, கிறிஸ்மஸ் இதயம், தன்னில் மாற்றங்களை, மாறுதல்களை உணர்வது. இவ்வாண்டு கிறிஸ்மஸ் புதுவகையில் சிறப்பிக்கப்படும் கிறிஸ்மஸாக நமக்கு அமையட்டும். வருகிற வெள்ளியன்று நிகழும் கிறிஸ்மஸ் பெருவிழா, இந்த டிசம்பரில் மட்டும் சிறப்பிக்கப்படும் விழாவாக அமையாமல், 2016ம் ஆண்டு முழுவதும், ஏன் எல்லாக் காலங்களிலும் நாம் செய்யும் செயல்களும், நாவின் பேச்சுகளும் கிறிஸ்மஸ் இதயத்தை வெளிப்படுத்துவதாய் அமையட்டும்.

இந்த விழாவைக் கொண்டாட இயலாமல் மருத்துவமனைகளிலும், சிறைகளிலும், புலம்பெயர்ந்தவர் முகாம்களிலும் உள்ளவர்களுக்கும், ஆதரவற்ற முதியோர்க்கும் நம் கிறிஸ்மஸ் இதயத்தைக் கொடுப்போம். கிறிஸ்மஸ் இதயம், கொடுக்கும் இதயம். கிறிஸ்மஸ் இதயம், தன்னைவிட மற்றவரை முதலில் நினைக்கும் பரந்த இதயம் கொண்டது. வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்திற்கும் இன்னுமொரு வாய்ப்பு இருக்கும். ஆனால், இன்னுமொரு வாழ்க்கைக்கு வாய்ப்பு ஒருபோதும் இருக்காது என்ற உண்மையை உணர்ந்து கிறிஸ்மஸ் இதயத்தை விறுவிறுப்புடன் இயங்க வைப்போம். அடுத்த நொடியைக்கூட நம்மால் ஆள முடியாது என்பதே எதார்த்தம். இதுவே இயற்கைப் பேரிடரும், திடீர் நிகழ்வுகளும் நமக்குக் கற்றுத்தந்துள்ள பாடம். அப்படியிருக்கும்போது, தேவையற்ற குப்பைகளை நம் இதயத்தில் குவித்து வைக்காது, அன்பை நிறைக்கின்ற, பிறர் பற்றி நினைத்து வாழும் கிறிஸ்மஸ் இதயம் கொண்டு வாழ்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.