2015-12-19 15:57:00

கிறிஸ்மஸ், முஸ்லிம்களுடன் நல்லுறவைக் கட்டியெழுப்பும் நேரம்


டிச.19,2015. ஈராக்கில் கிறிஸ்தவர்கள் அநீதிகளை எதிர்கொண்டாலும், நாட்டுப்பற்றுடன் வாழ்வதிலும், உடன் வாழும் அனைத்து குடிமக்களையும், ஏன், முஸ்லிம்களையும் அன்பு கூர்வதிலும், பின்னோக்கிச் செல்லாமல், முன்னோக்கிச் செல்வோம் என்று கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார் பாக்தாத் முதுபெரும் தந்தை இரஃபேல் லூயிஸ் சாக்கோ.

துன்பம், அடக்குமுறை மற்றும் உரிமை மீறல் சூழல்களில் ஈராக் கிறிஸ்தவ சமூகம் வாழ்ந்து வந்தாலும், கிறிஸ்தவர்களின் இதயங்களில், அமைதியிலும், கண்ணீரிலும், வரவிருக்கும் கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாட தயாரிப்புகள் இடம்பெற்று வருகின்றன என்று, ஆசியச் செய்தி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார் முதுபெரும் தந்தை சாக்கோ.

இஞ்ஞாயிறன்று பாக்தாத் பேராலயப் புனிதக் கதவைத் திறக்கவுள்ள முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், ஈராக்கில் மனித உரிமை விடயத்தில் ஆதரவளிக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் எவ்விதப் பாகுபாடும் இன்றி, சம உரிமையுடன் வாழ வேண்டும் என்ற விழுமியங்களுக்கு ஆதரவளிக்கும் எல்லாருக்கும் தன் கிறிஸ்மஸ் செய்தியில் நன்றி தெரிவித்துள்ளார், முதுபெரும் தந்தை சாக்கோ.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.