2015-12-19 16:04:00

அன்னை தெரேசா அறிவிப்பு, இரக்கத்திற்கு விடுக்கப்படும் அழைப்பு


டிச.19,2015. அருளாளர் அன்னை தெரேசா அவர்களின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமை ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளது, நாம் இதுவரை பெற்றுள்ள கிறிஸ்மஸ் கொடைகளில் மிகச் சிறந்தது என்று கூறினார் மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.

இது குறித்து கருத்து தெரிவித்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், அன்னை தெரேசா அவர்களுடன் தனிப்பட்ட முறையில் மிக ஆழ்ந்த நட்புறவு கொண்டிருந்ததாகவும், பல நிகழ்வுகளில் பல மணி நேரங்கள் அவர்களுடன் செலவிட்டதாகவும் கூறினார்.

உலகுக்கும், சமயச் சார்பற்ற உலகுக்கும், கிறிஸ்தவ உலகுக்கும் அன்னை தெரேசா அவர்கள் இந்தியாவின் கொடை என்றுரைத்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், மத வேறுபாடின்றி, எல்லாரும் அன்னை தெரேசாவை அன்பு கூர்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

அன்னை தெரேசா அவர்கள், கருணை வாழ்வை உண்மையிலேயே வாழ்ந்தவர்கள், அவரின் ஒவ்வொரு நாள் வாழ்வும் இரக்கத்தின் ஆண்டாக இருந்தது, அவர் புனிதராக உயர்த்தப்படுவது 21ம் நூற்றாண்டில் இரக்கத்திற்குத் தெளிவாக அழைப்பு விடுப்பதாக உள்ளது என்று கூறினார் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.

2008ம் ஆண்டில் எந்த மருத்துவ சிகிச்சைகளும் பலன்தராமல் கோமா நிலையில் இறந்து கொண்டிருந்த பிரேசில் நாட்டு பொறியியலாளர் ஒருவரின் மனைவி, அருளாளர் அன்னை தெரேசாவிடம் தொடர்ந்து செபித்ததால் அவர் உயிர் பிழைத்துள்ளார். 42 வயது நிரம்பிய அந்தப் பொறியியலாளர் தற்போது முழுமையாய்க் குணமடைந்து தொழில்நுட்ப பொறியாளராகப் பணியாற்றி வருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.