2015-12-15 16:56:00

ஆசியாவில் 18 இலட்சம் குழந்தைகள் இறப்பைத் தடுக்க முடியும்


டிச.15,2015. தென்கிழக்கு ஆசியாவில் தடுத்து நிறுத்தக்கூடிய நோய்களால் ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் 7,400 குழந்தைகள் இறக்கின்றனர், எனினும், இவ்விறப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு அளவைத் தடுக்கமுடியும் என்று WHO உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும், பிறந்தவுடன் இறக்கும் 27 இலட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அரசுகள் துரித நடவடிக்கை எடுக்குமாறு, WHO நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய இயக்குனர் Poonam Khetrapal Singh அவர்கள் கேட்டுக்கொண்டார்.

தென்கிழக்கு ஆசியாவில் இவ்விறப்புகளைத் தடுப்பதற்கு, ஐ.நா.வின் குழந்தை நல அமைப்பு (UNICEF), ஐ.நா. மக்கள் தொகை நிதி அமைப்பு (UNFPA), உலக வங்கி, ஐ.நா. எய்ட்ஸ் நோய்க் கட்டுப்பாட்டு திட்டம் (UNAIDS), ஐ.நா. பெண்கள் அமைப்பு ஆகியவை இத்திங்களன்று இணைந்து உறுதியெடுத்து, அறிக்கையொன்றில் கையெழுத்திட்டுள்ளன. 

தென் கிழக்கு ஆசியாவில் இடம்பெறும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பில், பிறந்தவுடனே இறக்கும் குழந்தைகள் ஐம்பது விழுக்காட்டுக்கு அதிகம் என்றும், 2030ம் ஆண்டுக்குள் இவ்விறப்பை ஆயிரத்துக்கு பன்னிரண்டு என்ற அளவுக்குக் கொண்டுவருவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்றும் WHO நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.