2015-12-14 16:17:00

திருத்தந்தை-வேலை, மனித மாண்போடு இணைந்து செல்ல வேண்டும்


டிச.14,2015. இத்தாலிய ஆயர் பேரவையின் Policoro திட்டக் குழுக்களின் ஏறக்குறைய இரண்டாயிரம் பேரை இத்திங்களன்று அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  ஒவ்வொரு தொழிலாளரின், குறிப்பாக இளையோர் தொழிலாளரின் சக்தியும், திறமைகளும், மனித மாண்பும், உரிமைகளும், ஆர்வங்களும் மதிக்கப்படுமாறு கேட்டுக்கொண்டார்.

Policoro திட்டக் குழுக்கள் வேலைவாய்ப்பற்ற இளையோர்க்கென ஆற்றிவரும் மனித மற்றும் ஆன்மீகப் பணிகளை ஊக்குவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வேலையில்லாததால் எண்ணற்ற இளையோர் இன்று வேலை தேடுவதையே கைவிட்டு விட்டனர், அதனால் அவர்கள் சமுதாயத்தின் புறக்கணிப்புக்கும், தனிமைப்படுத்தலுக்கும் உள்ளாகியுள்ளனர் என்றும் கூறினார்.

பரிந்துரைகளைப் பெறும் சிலருக்கு மட்டுமே கிடைக்கும் கொடை அல்ல வேலை, ஆனால் வேலைவாய்ப்பு, அனைவரும் கொண்டிருக்கும் உரிமை என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, மனித மாண்பை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படும் வேலைவாய்ப்புத் திட்டங்கள் அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்.

இளையோர்க்கு வேலைவாய்ப்பைத் தேடிக் கொடுப்பது மட்டுமல்ல, அவர்கள் வேலையின் தூய மதிப்பை உணர்வதன் வழியாக நற்செய்திப் பணியாற்ற வேண்டிய கடமையையும் அவர்கள் கொண்டிருக்கின்றனர் என்பதை உணரச் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இளையோர், நற்செய்தி, வேலை என்ற விருதுவாக்குடன், அருள்பணி மாரியோ ஒப்பெர்த்தி அவர்கள் 1995ம் ஆண்டில் இத்தாலியின் பலேர்மோ நகரில் Policoro திட்டத்தை ஆரம்பித்தார். இத்தாலிய ஆயர் பேரவை நடத்தும் இத்திட்டத்தின் 20ம் ஆண்டு நிறைவின் நினைவாக இக்குழுவினர் திருத்தந்தையைச் சந்தித்தனர்.

இத்தாலியின் லொம்பார்தி மாநிலத்தின் Sant'Angelo சிறைக் கைதிகளின் பிரிதிநிதிக் குழு ஒன்றும் இச்சந்திப்பில் கலந்து கொண்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.