2015-12-12 15:03:00

சி-9 கர்தினால்கள் அவையின் 12வது அமர்வு நிறைவு


டிச.12,2015. வத்திக்கானில் இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்த கர்தினால்கள் ஆலோசனை அவையின் 12வது அமர்வு பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கினார் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி.

திருப்பீடத் தலைமையகச் சீர்திருத்தத்தில் திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் ஒன்பது பேர் கொண்ட கர்தினால்கள் அவையின் 12வது அமர்வு, டிசம்பர் 10 இவ்வியாழனன்று தொடங்கி, டிசம்பர் 12, இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்தது. இந்த மூன்று நாள்கள் அமர்வுகளிலும் எல்லா உறுப்பினர்களும் கலந்துகொண்டனர் என்று அருள்பணி லொம்பார்தி அவர்கள் கூறினார்.

கீழை வழிபாட்டுமுறை பேராயத் தலைவர் கர்தினால் Leonardo Sandri அவர்கள் சமர்ப்பித்த அப்பேராயம் குறித்த விரிவான அறிக்கையையும், பொருளாதார அவையின் தலைவர் கர்தினால் Reinhard Marx, பொருளாதார செயலகத்தின் தலைவர் கர்தினால் George Pell, ஆகியோர் பொருளாதாரத்தில் சீர்திருத்தத்திற்கு முன்வைத்த பரிந்துரைகளையும் இவ்வமர்வுகளில் கர்தினால்கள் கேட்டனர். திருப்பீடச் செயலகம், நிர்வாகம், அசையாச் சொத்து அமைப்பான APSA, நற்செய்தி அறிவிப்புப் பேராயம், சமூகத்தொடர்பு செயலகம், IOR ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இவ்வமர்வுகளுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். மேலும், கர்தினால் Sean O’Malley அவர்கள், சிறார் பாதுகாப்பு அவையின் பணிகள் பற்றியும் விளக்கினர்.

கர்தினால்கள் ஆலோசனை அவையின் 2016ம் ஆண்டின் அமர்வுகள் குறித்த தேதிகளையும் அறிவித்தார் அருள்பணி லொம்பார்தி.

2016ம் ஆண்டின் அமர்வுகள் - பிப்ரவரி 8-9, ஏப்ரல்11-12-13, ஜூன்   6-7-8, செப்டம்பர்,12-13-14 , டிசம்பர் 12-13-14 ஆகிய தேதிகளில் நடைபெறும்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.