2015-12-11 15:36:00

இலங்கையில் ஊழலுக்கு எதிரான முயற்சிக்கு கத்தோலிக்கர் ஆதரவு


டிச.11,2015. ஊழலற்ற ஓர் இலங்கையை உருவாக்குவதற்கும், அரசு அதிகாரிகள் நாட்டின் வளங்களையும், அதிகாரங்களையும் தவறாகப் பயன்படுத்துவதை தடைசெய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் கொணருவதற்குமென இடம்பெற்ற பேரணிக்கு கத்தோலிக்கர் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

ஊழலைத் தடைசெய்யும் சட்டத் திருத்தம் தேவை என்பதை வலியுறுத்தி இப்புதனன்று கொழும்பு நகரின் தெருக்களில் நடைபெற்ற போராட்டங்களில் கத்தோலிக்கரும் இணைந்தனர்.

இலஞ்சம், ஊழல் தொடர்புடைய புகார்களை விசாரணை செய்யும் குழு, அரசியல் தலையீடின்றி தனித்துவமாக இயங்குவதற்கு வழி அமைக்கப்பட வேண்டுமன்றும் போராட்டதாரர்கள் வலியுறுத்தினர்.

இப்போராட்டத்தில் கலந்துகொண்ட, கொழும்பு உயர்மறைமாவட்ட அருள்பணி ஜூட் பெர்னார்டு ரொட்ரிகெஸ் அவர்கள் கூறுகையில், கடந்த முப்பது ஆண்டுகளாக மக்கள் ஊழலால் மிகவும் துன்புற்று வருகின்றனர் என்று தெரிவித்தார்.

இலங்கை கத்தோலிக்கத் திருஅவையும் இலஞ்ச, ஊழலுக்கு எதிராக, தொடர்ந்து போராடி வருகின்றது என்றும் கூறினார் அருள்பணி ரொட்ரிகெஸ்.

உலகில் ஊழல் மிகுந்த 175 நாடுகளில் இலங்கை 85 வது இடத்தில் உள்ளதாக 2014ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.