2015-12-09 16:13:00

கிறிஸ்தவர்களுக்கு எதிராக, ISIS வன்முறைகள் 'இனப் படுகொலை'


டிச.09,2015. கிறிஸ்தவர்களுக்கு எதிராக, ISIS தீவிரவாத அமைப்பு மேற்கொண்டுவரும் வன்முறைகளை 'இனப் படுகொலை' என்ற பெயரால் அழைக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை, வாஷிங்க்டன் பேராயர் கர்தினால் டானல்ட் வேர்ல் (Donald Wuerl) உட்பட 30க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தலைவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாராளுமன்றத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.

ஈராக் நாட்டின் நினிவே பள்ளத்தாக்கில் ISIS தீவிரவாத அமைப்பு, கிறிஸ்தவர்களை இலக்காக வைத்து செய்துவரும் வன்முறைகள், ஓர் இன அழிப்பு முயற்சியே தவிர வேறெதுவும் இல்லை என்று இத்தலைவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

2014ம் ஆண்டு முதல், நினிவே பள்ளத்தாக்கில் வாழும் கிறிஸ்தவர்கள் இல்லங்களில் ISIS தீவிரவாதிகள், 'நாசரேத்தவர்கள்' ("Nazarene") என்பதைச் சுட்டிக்காட்டும் N என்ற எழுத்தைப் பதித்து, அவர்களிடமிருந்து கூடுதல் வரி, அல்லது, மரணம் என்ற நிலையை உருவாக்கியிருப்பது, 'இனப்படுகொலை'  என்பதை உறுதி செய்கிறது என்று கிறிஸ்தவ மதத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

ISIS தீவிரவாதிகளின் வன்முறைகள் 'இனப்படுகொலை' என்று ஏற்றுக்கொள்ளப்பட்டால், அதற்குத் தகுந்த நடவடிக்கைகளை, அமெரிக்க அரசும், ஏனைய உலக அரசுகளும் மேற்கொள்ள உதவும் என்ற காரணத்தால், அமெரிக்க பாராளு மன்றத்தில் இந்த விவாதம் தற்போது இடம்பெற்று வருகிறது என்று CNS அமெரிக்கக் கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.