2015-12-09 15:04:00

கடுகு சிறுத்தாலும் – அனைவரும் இறைவனின் குழந்தைகளே


சென்னை சூளைமேடு பகுதியில் வாழும் பிரிட்டோ என்ற காவல்துறையினரின் பாட்டி அந்தோனி அம்மாள் மருத்துவமனையில் இறந்துவிட்டார். பிரிட்டோ தொலைபேசியில் உதவி கேட்க, களத்தில் குதித்திருக்​கிறார்கள் முஸ்லிம் இளைஞர்கள். மருத்துவமனையில் இருந்து உடலை வீட்டுக்குக் கொண்டு வந்த முஸ்லிம் இளைஞர்கள்தான் அடக்கம் செய்யவும் உதவியிருக்கிறார்கள். வீட்டிலிருந்து சவப்பெட்டியை, இரண்டு கி.மீ. தூரத்துக்கு வெள்ளத்தில் சுமந்து போயிருக்​கிறார்கள். ‘‘கிறிஸ்தவரின் உடலை முஸ்லிம்கள் சுமந்தார்கள் எனச் சொன்னால்கூட அது மலிவான பிரச்சாரம் ஆகிவிடும். இது மனிதநேய உதவி”, எனச் சொல்லியிருக்கிறார்கள் அந்த இளைஞர்கள்.

முகமது யூனுஸ் என்கிற இளைஞர், தனது சொந்த செலவில் மீட்புப் பணிகளைச் செய்ய ஆரம்பித்தார். சென்னை பெசன்ட் நகர் பகுதி மீனவர்களுடன் பேசி, படகுக்கு 1,500 ரூபாய் வாடகை  வழங்கி, 4 படகுகளுடன் மீட்புப் பணியில் இறங்கினார். இரண்டு நாட்களில் அதிக நபர்களைக் காப்பாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டதால், 20 ஆயிரம் ரூபாய்க்கு படகுகளை வாடகைக்கு எடுத்து, கைபேசி மூலம் இணைத்து மீட்புப் பணிகளை மேற்கொண்டார். 17 படகுகள் வரை தனது சொந்தச் செலவில் மீட்புப் பணியில் ஈடுபடுத்தினார். ஒரு கட்டத்தில் தனது பணப்பை, வங்கி ஏ.டி.எம் அட்டைகள் என அனைத்தும் தண்ணீரில் தொலைந்து போக, முகநூலில் தனது நண்பர்களை உதவுமாறு கேட்க, உதவி குவிந்திருக்கிறது. ஊரப்பாக்கத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, முதல் மாடி வரை மூழ்கி இருந்த வீட்டின் மாடியில் கர்ப்பிணிப் பெண் சித்ரா, உதவிக்கு யாரும் இல்லாமல் தவித்திருக்கிறார். முகம்மது யூனுஸ் உடனடியாக நீரில் குதித்து சித்ராவைக் காப்பாற்றி படகில் சேர்த்ததுடன், அவரது கணவர் சந்துருவையும் மீட்டிருக்கிறார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சித்ராவுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. தங்களைக் காப்பாற்றியதற்கு நன்றிக் கடனாக, பிறந்த குழந்தைக்கு ‘யூனுஸ்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். யூனுஸிடம் பேசிய போது ‘‘இந்த உதவி மனிதாபிமானம் பார்த்துச் செய்தது. அதற்கு எந்தச் சாயமும் பூச வேண்டாம்’’ என்றார்.

மனிதாபிமானத்திற்கு மதங்கள் தடைகளல்ல. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.