2015-12-09 16:07:00

இரக்கத்தின் யூபிலி ஆண்டு, மறுமலர்ச்சி பெறும் தருணம்


டிச.09,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாயன்று ஆரம்பித்திருக்கும் இரக்கத்தின் யூபிலி ஆண்டினை, வறியோராகிய நமக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு தர்மமாகக் கருதாமல், ஆன்மீக அளவில், மறுமலர்ச்சி பெறுவதற்கு ஏற்ற ஒரு தருணமாகக் கருதவேண்டும் என்று, தென்னாப்ரிக்க ஆயர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டின்போது, ஞாயிறு வழிபாடுகளில், 'இரக்கத்தின் நற்செய்தி' என்றழைக்கப்படும் லூக்கா நற்செய்திப் பகுதிகள் இடம்பெறுவதைச் சுட்டிக்காட்டும் ஆயர்களின் இவ்வறிக்கை, நற்செய்தியாளர் லூக்காவைப் போல, இரக்கத்தை உலகெங்கும் பரப்பும் முயற்சிகளில் கிறிஸ்தவர்கள் ஈடுபடவேண்டும் என்று கோரியுள்ளது.

வருகிற ஞாயிறன்று, தென்னாப்ரிக்க மறைமாவட்டங்களில் புனிதக் கதவுகள் திறக்கப்படும் என்பதைச் சிறப்பாகக் குறிப்பிடும் ஆயர்கள், இந்த யூபிலியின்போது, ஒப்புரவு அருள் அடையாளத்தை ஒரு தண்டனையாக அணுகாமல், ஒரு கொண்டாட்டமாகக் கருதும்படி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.