2015-12-09 15:40:00

26 இலட்சம் குழந்தைகளை கடும் குளிரிலிருந்து காக்க முயற்சி


டிச.09,2015. போர்க்களமாகத் தொடர்ந்துவரும் சிரியாவில் வாழும் 80 இலட்சம் குழந்தைகளை, குறிப்பாக, புலம் பெயர்ந்து முகாம்களில் வாழும் 26 இலட்சம் குழந்தைகளை, நெருங்கியுள்ள கடும் குளிர் காலத்திலிருந்து காப்பாற்றுவதற்கு, UNICEF நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

குளிர் காலத்தின் கொடுமையிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள, முகாம்களில் பிளாஸ்டிக் மற்றும் ஏனைய நச்சுப் பொருள்களை எரிக்கும் கட்டாயத்திற்கு உள்ளாகும் வேளையில், குழந்தைகள் மூச்சுத் திணறல் ஏற்படும் ஆபத்தில் உள்ளனர் என்று, ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பான UNICEFன் மத்தியக் கிழக்குப் பகுதி இயக்குனர், பீட்டர் சலாமா (Peter Salama) அவர்கள் கூறினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக சிரியாவில் தொடர்ந்து வரும் மோதல்களால், பல குடும்பங்கள் தங்கள் சேமிப்பு அனைத்தையும் இழந்துள்ள நிலையில், பன்னாட்டு நிதியையும், மனிதாபிமான அமைப்புக்களின் உதவிகளையும் எதிர்பார்த்து வாழ்கின்றனர் என்று ஐ.நா.வின் அறிக்கையொன்று கூறுகிறது.

சிரியாவிற்குள் புலம் பெயர்ந்து வாழும் 26 இலட்சம் குழந்தைகளுக்கும், துருக்கி, ஜோர்டான் நாடுகளில் வாழும் ஒரு இலட்சம் குழந்தைகளுக்கும், குளிர் கால உடைகள், பள்ளிகள் மற்றும் முகாம்களில் வெப்பம் உருவாக்கும் கருவிகள் போன்ற உதவிகளைச் செய்ய UNICEF தீர்மானித்துள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.