2015-12-08 15:19:00

ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவரிடமிருந்து திருத்தந்தைக்கு பரிசு


டிச.08,2015. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கத்தோலிக்கரும் ஆர்த்தடாக்ஸ் சபையினரும் இணைந்து கையெழுத்திட்டு வெளியிட்ட அறிக்கையின் நினைவாக பரிசு ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அனுப்பியுள்ளார் கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ.

1054ம் ஆண்டில் கிறிஸ்தவத்தில் இடம்பெற்ற மாபெரும் பிரிவினையைத் தொடர்ந்து, கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபைகளில் விதிக்கப்பட்ட புறம்பாக்கல் நடவடிக்கையை வரலாற்றிலிருந்து அகற்றும் விதமாக, 1965ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதியன்று அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை அத்தெனாகோரஸ் ஆகிய இருவரும் இணைந்து அறிக்கை வெளியிட்டனர்.

டிசம்பர் 7 இத்திங்களன்று திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த, திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கர்தினால் Kurt Koch அவர்கள், முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்கள் திருத்தந்தைக்கு அனுப்பிய பரிசை வழங்கினார்.

ஆர்த்தடாக்ஸ் சபையின் பாதுகாவலராகிய புனித அந்திரேயா விழாவான நவம்பர் 30ம் தேதி துருக்கியில் இடம்பெற்ற கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபை விழாவில் கலந்துகொள்ளச் சென்றபோது முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களிடமிருந்து இப்பரிசை பெற்று வந்தார் கர்தினால் Kurt Koch.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.