2015-12-08 15:33:00

COP-21 காலநிலை உச்சி மாநாட்டில் கர்தினால் டர்க்சன்


டிச.08,2015. இப்பூமிக்கு இழைக்கப்பட்டுள்ள கடும் சேதத்தின் முன்பாக நாம் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது, இந்தப் பெரும் சேதங்களின் பாதிப்புக்களால் கடும் துன்பங்களுக்கு உள்ளாகியுள்ள இலட்சக்கணக்கான மக்களை நாம் புறக்கணிக்கவும் முடியாது என்று கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் கூறினார்.

பாரிசில் நடந்துவரும் COP-21 காலநிலை உச்சி மாநாட்டில் இச்செவ்வாயன்று உரையாற்றிய திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவரான கர்தினால் டர்க்சன் அவர்கள், ஒவ்வொரு நாட்டிலும், காலநிலை பாதிப்பின் பெரும் அடையாளம் தெரிகின்றது என்று தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்ற காலம் இதுவே என்றுரைத்த கர்தினால் டர்க்சன் அவர்கள், பல அறிவியலாளர்களும் பொருளாதார நிபுணர்களும் எச்சரிக்கை கொடுத்து வருகின்றனர், நடவடிக்கை எடுப்பதற்கு நாம் காலம் தாழ்த்தினால், சுற்றுச்சூழல் நிலைகளைச் சரிசெய்வது மிகவும் கடினமாக அமையும் என்றும் எச்சரித்தார்.

நாம் அதிகமாக காலம் தாழ்த்த தாழ்த்த, துன்பங்களும், அழிவுகளும் அதிகமாகிக்கொண்டே இருக்கும் என்றும் கர்தினால் டர்க்சன் அவர்கள் COP-21 உச்சி மாநாட்டில் கூறினார்.

நவம்பர் 30ம் தேதி தொடங்கியுள்ள இந்த COP-21 உச்சி மாநாடு டிசம்பர் 11ம் தேதி நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.