2015-12-07 15:27:00

பாரிஸ் காலநிலை உச்சி மாநாடு வெற்றியடைய செபம்


டிச.07,2015. பாரிஸ் காலநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவரும், முழு மனித சமுதாயத்திற்கும் அதிக நன்மையைக் கொணரும் தீர்மானங்களை எடுப்பதற்குத் துணிச்சலைப் பெறுமாறு இறைவனிடம் செபிப்போம் என்று இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் திருப்பயணிகளிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தற்போது உலகில் வளர்ந்து வரும் சிறார்க்கும், நமக்குப் பின் வருபவர்களுக்கும் நாம் எத்தகைய உலகை விட்டுச்செல்ல விரும்புகின்றோம் என்று, தனது Laudato Si' சுற்றுச்சூழல் திருமடலில் கேட்டுள்ளதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, நாமும், நமது வருங்காலத் தலைமுறைகளும் பகிர்ந்துகொள்ளும் பொதுவான இல்லத்தின்பொருட்டு பாரிஸ் நகர உச்சி மாநாடு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் அமைய வேண்டுமென்று கூறினார்.

மேலும், கத்தோலிக்கருக்கும் ஆர்த்தடாக்ஸ் சபையினருக்கும் இடையே இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவு நிகழ்வின் 50ம் ஆண்டு இத்திங்களன்று இடம்பெறுகின்றது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதுபெரும் தந்தை பர்த்தலோமேயோ மற்றும் பிற ஆர்த்தடாக்ஸ் சபைகளின் தலைவர்களுக்காகச்  செபிப்போம் என்று இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார்.

2ம் வத்திக்கான் பொதுச் சங்கம் நிறைவடைந்த 1965ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதியன்று அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை அத்தெனாகோரஸ் ஆகிய இருவரும் இணைந்து ஓர் அறிக்கை வெளியிட்டனர். அதில் உரோம் திருஅவைக்கும், கான்ஸ்டான்டிநோபிள் சபைக்கும் இடையே 1054ம் ஆண்டில் இடம்பெற்ற பிரிவினையில் புறம்பாக்கப்பட்ட தீர்ப்புகள் காலத்தின் நினைவிலிருந்து அழிக்கப்படுமாறு கூறப்பட்டிருந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.