2015-12-07 15:49:00

தென் கொரிய அருள்பணியாளர்கள் வட கொரியாவில் திருப்பலி


டிச.07,2015. வட கொரிய கம்யூனிச நாட்டில் முக்கியமான கத்தோலிக்க விழாக்களைக் கொண்டாடுவதற்கு, தென் கொரிய அருள்பணியாளர்கள் தொடர்ந்து அனுப்பப்படுவார்கள் என்று, தென் கொரிய ஆயர் பேரவை இத்திங்களன்று அறிவித்தது.

வட கொரிய கத்தோலிக்க கழகத்தின் அழைப்பின்பேரில், தென் கொரிய நான்கு ஆயர்கள் மற்றும் 13 அருள்பணியாளர்களைக் கொண்ட பிரதிநிதிகள் குழு, வட கொரியத் தலைநகர் Pyongyangகுக்கு நான்கு நாள்கள் பயணம் மேற்கொண்டது.

இப்பயணம் குறித்து செயோலில் செய்தியாளர் கூட்டத்தில் இதனை அறிவித்த தென் கொரிய ஆயர் பேரவையின் பேச்சாளர், கொரிய கத்தோலிக்கருக்கிடையே ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றங்கள் அதிகரிக்கப்படுவதற்கு இச்சுற்றுப் பயணம் உதவியுள்ளது என்று கூறினார்.

மேலும், வரும் ஆண்டுகளில் இரு நாடுகளின் எல்லைகளில் மதம் சார்ந்த பரிமாற்றங்களை மேம்படுத்துவதற்கு உரையாடல்கள் நடத்துவதற்கும் உறுதி அளிக்கப்பட்டதாகத் தெரிவித்த அப்பேச்சாளர், வடகொரியாவுக்குச் சென்று வந்துள்ள அருள்பணியாளர்கள், Pyongyang நகரின் Changchung கத்தோலிக்கப் பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்ற அனுமதியளிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

வட கொரியாவில் Changchung ஒரேயொரு கத்தோலிக்கப் பேராலயமே உள்ளது 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.