2015-12-05 15:05:00

கர்தினால் டர்க்சன் படைப்பைப் பாதுகாக்க ஆறு கதவுகள்


டிச.05,2015. அநீதிகள் மற்றும் சுற்றுச்சூழல் அழிவுகளின் உலகளாவிய நெருக்கடிகள், அனைத்து மக்களையும், உலகின் ஒவ்வொரு பகுதியையும் பாதித்துள்ளன என்று கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் இவ்வெள்ளி இரவில் இலண்டனில் கூறினார்.

கத்தோலிக்க உதவி மற்றும் வளர்ச்சி நிறுவனமான CAFOD ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றிய, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவரான கர்தினால் டர்க்சன் அவர்கள், நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பதற்கு உதவும்  ஆறு கதவுகள் குறித்துப் பேசினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Laudato Si’ திருமடல் வலியுறுத்தும் கருத்துக்களைச் சுட்டிக்காட்டிப் பேசிய கர்தினால் டர்க்சன் அவர்கள், அரசியல்வாதிகளைத் தூண்டுவதன் வழியாக ஒவ்வொருவரும் தங்களுக்கு உரிய வகையில் இயற்கையைப் பாதுகாப்பதற்கு முயற்சிக்க வேண்டுமென்று கூறினார்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டு ஆரம்பிக்கவுள்ள இவ்வேளையில், படைப்பு அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதையும், நாம் இப்பூமியைக் கையாளும் விதம், நமக்கு அடுத்திருப்பவரை நாம் நடத்தும் முறையில் எதிரொலிக்கும் என்பதையும் நாம் உணர வேண்டும் என்று கூறினார் கர்தினால் டர்க்சன்.

நமது சுற்றுச்சூழலின் உடனடித் தேவைக்குப் பதிலளிப்பதில் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும், நன்மனம் கொண்ட அனைவருடனும் தோழமையில் உரையாடலை மேற்கொண்டு தீர்வுகளைத் தேட வேண்டும் என்றும் கூறினார் கர்தினால் டர்க்சன். ஆறாவது கதவாக, நாம் செபத்தில் ஆழமாக வேரூன்றி, மனமாற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும், நம் பூமியின் எதிர்காலம் குறித்து உயரிய, பெரிய கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறினார் கர்தினால் டர்க்சன்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.