2015-12-05 13:59:00

கடுகு சிறுத்தாலும் – கிறிஸ்மஸ் விழாவா? வியாபாரமா?


அமெரிக்காவின் Shopping Mall ஒன்றில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் ஒரு நிகழ்ச்சி இது: அந்த Mallஇல் கிறிஸ்மஸ் வியாபாரம் வெற்றிகரமாக நடந்துகொண்டிருந்தது. பொருட்கள் வாங்கிக் களைத்துப் போனவர்கள் இளைப்பாறுவதற்கு அந்த Mallன் ஒரு பகுதியில் தனியிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவ்விடத்தில் அமர்ந்திருந்த ஒருவர், பொருள்கள் வாங்கியவர்களிடமும், அல்லது, வாங்க வந்திருப்பவர்களிடமும் வலியச்சென்று பேச ஆரம்பித்தார். அவர் மிகவும் கண்ணியமாக, கனிவாகப் பேசியதால், அவர் சொன்னதை மக்கள் கேட்டனர். அவர் அங்கு அமர்ந்திருந்தவர்களிடம் ஒரு சில கேள்விகள் மட்டும் கேட்டார்:

"ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள்? கிறிஸ்மசுக்கு இத்தனை பரிசுகள் வாங்கத்தான் வேண்டுமா? நீங்கள் செலவு செய்யும் பணத்தில் பாதியை ஏழைகளோடு பகிர்ந்துகொண்டால், உங்கள் கிறிஸ்மஸ் இன்னும் மகிழ்வாக இருக்காதா? நீங்கள் பல நாட்களாக மன்னிக்க முடியாமல் கஷ்டப்படும் ஒருவரைத் தேடிச்சென்று, அவருடன் ஒப்புரவனால், அதைவிட சிறந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டம் இருக்க முடியுமா? இந்தக் கடைகளில் காணப்படும் கிறிஸ்மஸ் மகிழ்ச்சி உங்களுக்குச் செயற்கையாக தெரியவில்லையா?" என்று அவர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையில் கேள்விகளை எழுப்பி வந்தார்.

அவர் சொன்னதில் இருந்த உண்மைகளை உணர்ந்த பலரும், தலையசைத்தனர். பொருள்கள் வாங்க வந்த ஒரு சிலர், மீண்டும் திரும்பிச்சென்றனர். வேறு சிலர், தாங்கள் புதுப்பிக்க விரும்பிய உறவுகளுக்காக, பரிசுப் பொருள்கள் வாங்கிச்சென்றனர். இன்னும் ஒரு சிலர், அந்த Mallஇல் நேரத்தைச் செலவிடுவதற்குப் பதில், அருகிலிருந்த ஒரு கோவிலுக்குச் சென்று அமைதியாக நேரத்தைச் செலவிட்டனர். கடைகளின் உரிமையாளர்கள் அந்த மனிதரைப்பற்றிக் கேள்விப்பட்டனர். Mallன் காவலாளிகளிடம் சொல்லி அந்த மனிதர் மீண்டும் அந்த Mallக்குள் நுழையாதவாறு தடுத்துவிட்டனர்.

கிறிஸ்து பிறப்பிற்கு ஒரு முன்னோட்டமாக, ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள் என்று இறைவாக்கினர் எசாயா கூறிய அறிவுரைகளை, இம்மனிதர், வேறு வகையில் சொல்லித் தந்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.