2015-12-03 15:05:00

திருத்தந்தை - நற்செய்தி அறிவிப்புப் பணி மனங்களை மாற்றும் பணி


டிச.03,2015. எங்கெங்கு தேவைகள் அதிகம் உள்ளனவோ, அங்கெல்லாம் கத்தோலிக்கத் திருஅவையின் இருப்பையும், பணியையும் கண்கூடாகக் காணமுடிகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

கடந்த நான்கு நாட்களாக வத்திக்கானில் நடைபெற்ற நற்செய்தி அறிவிப்புப் பணி திருப்பேராயத்தின் நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட கர்தினால்கள், ஆயர்கள், அருள் பணியாளர்கள் மற்றும் துறவியரை, இவ்வியாழன் மதியம் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இப்பேராயம் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டும் வகையில் இவ்வாறு கூறினார்.

திருஅவை உலகெங்கும் ஆற்றிவரும் சக்தி மிகுந்த, துடிப்புள்ள பணிகளுக்கு ஆப்ரிக்கக் கண்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும், அங்கு இப்பணிகளின் தாக்கங்களை தான் நேரில் கண்டதாகவும் திருத்தந்தை இச்சந்திப்பில் மகிழ்வுடன் எடுத்துரைத்தார்.

நற்செய்திப் பணியில் ஈடுபட்டுள்ள திருஅவை, தான் அந்த நற்செய்தியின் வழியில் நடப்பதை முதலில் உறுதி செய்யவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, நற்செய்தி அறிவிப்பு என்ற பணி, வெறும் கொள்கைப்பரப்புப் பணியல்ல, மாறாக, நம் மனங்களை மாற்றும் பணி என்பதை திருஅவை உணரவேண்டும் என்று திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

நற்செய்தி அறிவிப்பு என்பது, திருஅவை தனக்குத் தானே பறைசாற்றிக்கொள்ளும் அறிவிப்பு அல்ல என்பதையும், எனவே, திருஅவை 'புறப்பட்டுச் செல்லவேண்டும்' என்பதையும் திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்களின் வார்த்தைகளில் எடுத்துரைத்தத் திருத்தந்தை, திருஅவை, விளிம்புகளுக்குச் சென்று, அங்குள்ளவர்களின் தேவைகளை நிறைவு செய்வதன் வழியே, நற்செய்தியை இன்னும் சக்தி வாய்ந்த வழியே அறிவிக்க முடியும் என்று கூறினார்.

நற்செய்தி அறிவிப்புப் பணி நாடுகளுக்குப் பாதுகாவலரான புனித பிரான்சிஸ் சேவியரின் திருநாள், டிசம்பர் 3, இவ்வியாழன் கொண்டாடப்படுவதை தன் உரையின் இறுதியில் நினைவுகூர்ந்தத் திருத்தந்தை, புனித சேவியர், புனித குழந்தை தெரேசா ஆகியோரின் வழிநடத்துதல் நற்செய்தி அறிவிப்புப் பணி திருப்பேராயத்திற்கு கிடைக்கவேண்டும் என்ற ஆசீரையும் வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.