2015-12-02 15:55:00

உப்பு நீரில் எரியும் விளக்கு பிலிப்பைன்ஸில் கண்டுபிடிப்பு


டிச.02,2015. உப்பு நீரைப் பயன்படுத்தி விளக்குகளை எரியச் செய்து புரட்சிகர கண்டுபிடிப்பொன்றை பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் அயிசா மிஜேனோ (Aisa Mijeno) அவர்கள் நிகழ்த்தியிருக்கின்றார்.

சூழலுக்கு பாதிப்பற்ற இந்த கண்டுபிடிப்பானது, கடற்கரை பகுதிகளில் வாழும் மக்களுக்கு மிகப் பயனுள்ளதாக அமையும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பிலிப்பின்ஸ் நாட்டில் உள்ள பல நூறு தீவுகளில் மின்சார வசதி இல்லாததால், அங்குள்ளவர்கள், மண்ணெண்ணெய் அல்லது, வேறு எரிபொருள்களைக் கொண்டு விளக்குகளை பயன்படுத்தும் சூழலில், மிஜேனோ அவர்களின் இந்தக் கண்டுபிடிப்பு, சிக்கனமானதாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பற்றதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

தேநீர் கோப்பையில் 2 கரண்டி உப்பைச் சேர்த்து அதனுடன் சில இரசாயனங்களை உள்ளிட்டு அதிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் எனவும் மிஜேனோ அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதில் இருந்து பெறப்படும் மின்சார வெளிச்சம் 8 மணி நேரத்திற்குப் போதுமானதாகவும் மண்ணெண்ணெய், மின் விளக்குகளைவிட சிக்கனமானதாகவும் உள்ளது. இந்த உப்பு விளக்கிற்கு பன்னாட்டு அங்கீகாரமும் கிடைத்துள்ளது..

ஆதாரம் : Salt.ph / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.